Published : 09 Feb 2014 02:26 PM
Last Updated : 09 Feb 2014 02:26 PM
"தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தி.மு.க. - அ.தி.மு.க. என்று இதுவரை இருந்த பரிமாணம் மோடி அலையால் இம்முறை உடையும். புதிய மாற்றம் தொடங்கும்" என்று பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியிடம் மதிமுக பொதுச் செயலர் வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.
நரேந்திர மோடியுடனான வைகோ சந்திப்பு குறித்து மதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சனிக்கிழமை இரவு பத்து மணி பத்து நிமிடம் அளவில், கிராண்ட் சோழா ஹோட்டலில் நரேந்திர மோடியை வைகோ சந்தித்தார். வைகோவைப் பார்த்ததும், நரேந்திர மோடி புன்முறுவலோடு 'வாருங்கள் வைகோ' என வரவேற்றார்.
'இந்தியாவின் வருங்கால பிரதமர் நரேந்திர மோடியை எல்லையற்ற மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்' என்று கூறி, அவருக்கு பொன்னாடை அணிவித்து வைகோ ஆரத்தழுவிக்கொண்டார்.
மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி, பொருளாளர் இரா.மாசிலாமணி, உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், இமயம் ஜெபராஜ் ஆகியோரும் நரேந்திர மோடிக்கு பொன்னாடை அணிவித்தனர்.
அதன்பின்னர், மோடியும் வைகோவும் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டனர். 'காலையில் இம்பாலில் பேசிவிட்டு, பகலில் ஹௌகாத்தியில் பேசிவிட்டு, மாலையில் இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும் உணர்ச்சிமிக்க உரையாற்றுவது என்பது அனைவராலும் இயலாது' என்றார் வைகோ.
"இந்தியில் நீங்கள் உரையாற்றும் நிமிடங்களில் அம்மொழியைப் புரிந்து கொள்ளாதவர்களைக் கூட நீங்கள் எழுப்பும் உணர்ச்சி மிக்க குரல், அதன் தொனி, உங்களுடைய கரங்களும் முகமும் வெளிப்படுத்தும் பாவனை மக்களை வசீகரித்தது. இன்று நீங்கள் ஆற்றிய உரை, உன்னதமான சொற்பொழிவாகும்" என்று வைகோ கூறியபோது, "மிகச்சிறந்த பேச்சாளரான நீங்கள் அல்லவா? பாராட்டுகிறீர்கள்" என்றார் மோடி.
"இன்றைய பேச்சில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மாநில உரிமைகளை நசுக்குவதைக் கண்டித்து, கூட்டாட்சி தத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தியது நாட்டுக்கு மிக அவசியமான கருத்தாகும்" என்று வைகோ கூறியபோது, "தமிழ்நாட்டுக்கு இந்தக் கருத்து மிகவும் அவசியமாயிற்றே" என்றார் மோடி.
"தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் கொல்லப்படுவதையும், அதைத் தடுக்காத மத்திய அரசின் கையாலாகாத தன்மையைப் பற்றிச் சாடியதும், நதிகள் இணைப்பின் அவசியத்தை வலியுறுத்தியதும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பங்கேற்ற தமிழ்நாட்டு கட்சிகள் ஊழல் செய்து அதனால் பலன் பெற்றதைப் பற்றியும் நீங்கள் கூறியதோடு, தன்னை மேதையாகக் கருதிக்கொள்ளும் மறு வாக்கு எண்ணிக்கை புகழ் அமைச்சர் சிதம்பரத்தை கிண்டல் செய்த முறையும் பேச்சின் சிறப்பான முத்திரைகள் ஆகும்" என்றார் வைகோ.
"வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி மட்டுமே 250 முதல் 272 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறும். நாடெங்கும் மோடி அலை வீசுகிறது. தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தி.மு.க. - அண்ணா.தி.மு.க. என்று இதுவரை இருந்த பரிமாணம் மோடி அலையால் இம்முறை உடையும். புதிய மாற்றம் தொடங்கும்" என்று வைகோ கூறியபோது, "நானும் அப்படித்தான் எதிர்பார்க்கிறேன்" என்றார் மோடி.
"லட்சக் கணக்கான ஈழத் தமிழர்கள் சிங்கள அரசால், படுகொலை செய்யப்பட்டதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் துரோகமும் காரணம் ஆகும். அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் கடைபிடித்த அணுகுமுறையையே நீங்கள் அமைக்கப் போகிற அரசும் பின்பற்ற வேண்டும்" என்று வைகோ கூறியதற்கு, "அப்படியே செய்வோம்" என்றார் மோடி.
"நாடெங்கும் விவசாயிகள் பெரும் துன்பத்தில் உள்ளனர். அகில இந்திய அளவிலான விவசாய சங்கங்களை இணைத்து எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, ஈரோட்டில் நீங்கள் பங்கேற்கும் விவசாயிகள் மாநாட்டை நடத்த விரும்புகிறார்.
விவசாய சங்க தலைவர்களோடு நாளை காலை உங்களை சந்திக்க வருகிறார். அம்மாநாட்டில் நீங்கள் விடுகின்ற செய்தி, இந்தியா முழுவதிலும் உள்ள விவசாயிகளுக்கு நம்பிக்கை ஊட்டும். எனவே உங்களுக்கு வசதிப்படும் தேதி தாருங்கள். முரளிதர ராவ், பொன்.இராதாகிருஷ்ணன், இல.கணேசன், மோன்ராஜூலு இதோ இருக்கிறார்கள். அவர்களிடமும் கலந்து தேதியை முடிவு செய்யலாம்" என்றார் வைகோ. அதற்கு மோடி, "அப்படியே ஏற்பாடு செய்யலாம்" என்றார்.
நீங்கள் மிகவும் களைப்பாக இருப்பீர்கள். வாழ்த்துகளோடு விடைபெறுகிறேன் எனக்கூறி வைகோ விடைபெற்றார்.
இவ்வாறு மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT