Published : 20 Feb 2015 03:37 PM
Last Updated : 20 Feb 2015 03:37 PM
சேலம் மத்திய சிறையில் தண்டனை பெற்ற சிறைவாசிகள் குறைந்த விலையில் காடா துணி, சுக்கு காபி, துணி சலவை செய்து கொடுக்கின்றனர். இதற்கு பொதுமக்களிடம் அமோக வரவேற்பு உள்ளதால், சிறைவாசிகள் நாள் தோறும் வருவாய் ஈட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் மத்திய சிறை கூடங்கள், கிளை சிறை, பெண்கள் சிறை மற்றும் திறந்தவெளி சிறை கூடங்கள் பல உள்ளன. சேலம் மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர்.
பெண்கள் சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். தவறு செய்து சிறை கூடங்களுக்கு வருபவர்கள் திருந்தி வாழ வேண்டும் என்ற அடிப்படையில் யோகா, திறந்தவெளி கல்வி, சுய தொழில் கூடம் என பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தண்டனை பெற்ற கைதிகள் பல ஆண்டுகள் சிறை கூடத்தில் வெறுமையாய் கழிப்பதால், அவர்கள் விடுதலை பெற்றுச் செல்லும் போது, கையில் காசு இல்லாமல கஷ்டப்பட வேண்டியிருக்கும். மீண்டும் அவர்கள் தவறு செய்ய வாய்ப்புகள் ஏற்படலாம்.
எனவே, தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் சிறைவாசிகளுக்கு தெரிந்த பணிகளை ஒதுக்கிக் கொடுத்து, அதன் மூலம் அவர்களுக்கு வருவாய் ஈட்டித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மத்திய சிறை கூடத்தில் தச்சு கூடம், கைத்தறி கூடம் உள்ளிட்டன உள்ளது. இங்குள்ள சிறைவாசிகள் வீட்டுக்கு தேவைப்படும் நாற்காலி, பெஞ்சு, டெஸ்க், கட்டில், அலமாரி உள்ளிட்ட பல்வேறு தச்சு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மத்திய சிறை வளாகத்தில் புதியதாக அங்காடி திறக்கப் பட்டுள்ளது.
இதில் மலிவு விலையில் காடா துணி, ஐந்து ரூபாய்க்கு சுக்கு காபி, 3 ரூபாயில் பேன்ட், சட்டை சலவை, புடவைக்கு ஐந்து ரூபாய், காட்டன் சேலைக்கு 10 ரூபாய், பட்டு புடவை 15 ரூபாய், மண்புழு உரம் கிலோ 15 ரூபாய் என மலிவு விலையில் விற்பனை செய்து வருகின்றனர். விரைவில் ஆண்கள் அழகு நிலையம் திறக்கப்பட உள்ளது.
சிறைவாசிகள் குறைந்த விலையில் கட்டில், துணி, சுக்கு காபி, சலவை செய்து அளிப்பது போன்ற பணிகளுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சேலம் மாநகரில் உள்ளவர்கள் சிறைவாசிகளிடம் சலவை துணிகளையும், சுக்கு காபி, மண் புழு உரங்களை அதிகளவு வாங்கிச் செல்கின்றனர். இதனால், ஒரு சிறை வாசி தினமும் ரூ.500 வரை வருவாய் ஈட்ட முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT