Last Updated : 15 Apr, 2014 09:36 AM

 

Published : 15 Apr 2014 09:36 AM
Last Updated : 15 Apr 2014 09:36 AM

சேலத்தில் நாளை பிரச்சாரக் கூட்டத்தில் மோடியுடன் விஜயகாந்த் பங்கேற்பு: சென்னையில் பங்கேற்காதது ஏன்?- பாஜக விளக்கம்

சேலத்தில் நாளை நடக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார்.

சென்னை மீனம்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார். இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் விஜயகாந்த், ராமதாஸ், வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் வரவில்லை. பாமக சார்பில் அன்புமணியும் தேமுதிக சார்பில் சந்திரகுமார் எம்எல்ஏவும் கலந்துகொண்டனர். அதே நேரத்தில் பாஜக, தேமுதிக, பாமக, மதிமுக வேட்பாளர்கள் 9 பேர் வந்திருந்தனர். அவர்களுக்கு மோடி ஆதரவு திரட்டினார்.

இந்தக் கூட்டம் நடந்த நாளில் விஜயகாந்த் சென்னையில்தான் இருந்துள்ளார். ஆனால், மோடி கூட்டத்துக்கு அவர் வராதது கூட்டணிக் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. மோடி ரஜினி சந்திப்பு குறித்து கடைசி நேரம் வரை தனக்கு தகவல் தெரிவிக்கப்படாததால் விஜயகாந்த் வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் மோகன்ராஜுலு கூறியதாவது:

மோடி பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்காததற்கு ஒரு காரணமும் இல்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லாததைத் தவிர வேறு உள்நோக்கம் கிடையாது. அவருக்குப் பதிலாக தேமுதிக கொறடா சந்திரகுமார் எம்எல்ஏவும் வடசென்னை, மத்திய சென்னை, திருவள்ளூர் தேமுதிக வேட்பாளர்களும் கலந்துகொண்டனர்.

இன்றுகூட (திங்கள்கிழமை) விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோரிடம் தொகுதி நிலவரம் குறித்து பேசினோம். சேலத்தில் நாளை (புதன்கிழமை) நடக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடியுடன் விஜயகாந்த் பங்கேற்கிறார். முடிந்தால், கோவை பொதுக்கூட்டத்திலும் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளார். இவ்வாறு மோகன்ராஜுலு கூறினார்.

போனில் மோடி வாழ்த்து

இதற்கிடையே, திங்கள்கிழமை மாலை தொலைபேசியில் விஜயகாந்தை தொடர்பு கொண்டு பேசிய நரேந்திர மோடி, அவருக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவரது பிரச்சாரம் வெற்றி பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x