Published : 23 Apr 2014 11:57 AM
Last Updated : 23 Apr 2014 11:57 AM
தென்காசி தொகுதியில் 5 முனைப்போட்டி இருப்பதாக கருதப்பட்டிருந்த நிலையில், தற்போது யார் காட்டில் சாரல் அடிக்கப்போகிறது? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இத் தொகுதியில் மொத்தம் 18 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். அவர்களில் புதிய தமிழகம் கட்சி தலைவர் க.கிருஷ்ணசாமி, மதிமுக வேட்பாளர் டாக்டர் சதன்திருமலைக்குமார், அதிமுக வேட்பாளர் வசந்தி முருகேசன், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கே.ஜெயக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பொ.லிங்கம் ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள்.
புதிய தமிழகம்:
இத் தொகுதியில் தேர்தலுக்கு 6 மாதத்துக்கு முன்னரே தேர்தல் களப்பணியை கிருஷ்ணசாமி தொடங்கி முடித்திருந்தார். அவரை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகிய முக்கிய பிரமுகர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஏற்கெனவே இத் தொகுதியில் இருக்கும் தாழ்த்தப்பட்டவர்களின் வாக்குகளுடன், சிறுபான்மையினரின் வாக்குகளும், தி.மு.க.வின் நிலையான வாக்கு வங்கியும் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தியிருப்பதாக புதிய தமிழகம் கட்சியினர் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
ம.தி.மு.க.:
உள்ளூரை சேர்ந்தவர் என்ற பிளஸ் பாயின்டுடன் களத்தில் இருக்கும் இக்கட்சி வேட்பாளர் சதன்திருமலைக் குமாரை ஆதரித்து அக் கட்சியின் பொதுசெயலர் வைகோ, விஜயகாந்த் பிரச்சாரம் செய்திருக்கின்றனர். இத்தொகுதியில் இருக்கும் மதிமுக, பாஜக வாக்குவங்கி பம்பரத்தை வீரியமாக சுழலவிடும் என்ற மதிமுகவினர் மார்தட்டுகிறார்கள்.
அ.தி.மு.க. :
இக்கட்சி வேட்பாளர் வசந்திமுருகேசனை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்திருக்கிறார். மாநில அமைச்சர் செந்தூர்பாண்டியனின் சொந்த தொகுதி என்பதால் அதிமுகவின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு. தாழ்த்தப்பட்டவர்களின் வாக்கு வங்கியை பெறும் முயற்சியாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியனை பிரச்சார களத்தில் இறக்கியிருந்தனர். அதனால் பயன் ஏற்பட்டதா என்பதை வாக்கு எண்ணிக்கை தெளிவுபடுத்தும்.
காங்கிரஸ்:
வெளியூர்க்காரர் என்ற மைனஸ் பாயின்டுடன் களத்தில் தன்னந்தனியாக இருக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியினரின் வாக்கு வங்கியும், சிறுபான்மையினரின் வாங்கு வங்கியும் கை கொடுக்கும் என்று அக் கட்சியினர் நம்பியிருக்கிறார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட்:
ஏற்கனவே இத் தொகுதியின் எம்.பி.யான பொ.லிங்கம் களத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார். அவருக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். தொழிலாளர்கள் நிறைந்த தொகுதியில் அவர்களது ஆதரவு தங்களுக்கு சாதமாக இருக்கும் என்று அதனால் கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்றும் தோழர்கள் நினைக்கிறார்கள்.
முந்துவது யார்?
இத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் போட்டியிடுவதால் நட்சத்திர அந்தஸ்து பெற்றிருக்கிறது. தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை ஒட்டுமொத்தமாக தன்பக்கம் கொண்டுவந்தால் அந்த அந்தஸ்தை கிருஷ்ணசாமி காப்பாற்றிவிடுவார் என்று கூறப்படுகிறது. ஆனாலும் சதன்திருமலைக்குமாரும், வசந்திமுருகேசனும் கிருஷ்ணசாமியின் வெற்றிக்கு போட்டியாளர்கள்தான் என்பதையும் சொல்ல வேண்டும். தேர்வு முடிவுகள் இதில் பல்வேறு விஷயங்களை தெளிவுபடுத்தும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT