Published : 01 Apr 2014 01:03 PM
Last Updated : 01 Apr 2014 01:03 PM
ஈரோடு மாவட்ட மலை கிராமங்களில் வசிக்கும் மலையாளி சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு சாதிச்சான்று வழங்குவதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை நீக்க வலியுறுத்தி நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க உள்ளதாக மலை கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த மலையானூர், குரும்பபாளையம், நல்லாக்கவுண்டன் கொட்டாய், ஈரட்டி, மின்தாங்கி, தேக்கன்காடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் மலையாளிகள் என்ற பிரிவு மக்கள் வசித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் என சாதிச்சான்று வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் சேலம் மாவட்டத்தில் வசிக்கும் இவர்களது உறவினர்களுக்கு பழங்குடியினர் என சாதிச்சான்று வழங்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தைப் போல தங்களுக்கும் பழங்குடியினர் சாதிச்சான்று வழங்க வேண்டும் என மலை கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால், இக்கோரிக்கையை வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பு செய்யவுள்ளதாக மலை கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இப்பகுதி கிராம மக்களின் வீடுகளில் துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இதுகுறித்து பர்கூரை அடுத்த கல்வாழை பகுதியைச் சேர்ந்த மலையாளி சமூகத்தை சேர்ந்த செல்லப்பன் கூறுகையில், “ஈரோடு மாவட்டத்தில் பர்கூர் மலைப்பகுதியிலும், சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதிகளிலும் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்களுக்கு சாதிச்சான்று வழங்குவதில் தொடர்ந்து குழப்பம் ஏற்படுவதால் மாணவர்கள் உயர் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இம்முறை எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பு செய்ய சமுதாய மக்கள் முடிவு செய்துள்ளனர்” என்றார்.
மலை கிராம மக்களின் தேர்தல் புறக்கணிப்புக்கான காரணம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும், இது தொடர்பாக ஆணையத்தின் உத்தரவுக்குப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT