Published : 03 Feb 2015 03:55 PM
Last Updated : 03 Feb 2015 03:55 PM
தாயிடம் இருந்து சேய்க்கு செல்லும் தொப்புள் கொடி குருதி மாற்றத்தில் புதிய ஆராய்ச்சி அறிக்கை சமர்ப்பித்த சேலம் அரசு மருத்துவமனை டாக்டருக்கு, தேசிய பச்சிளம் குழந்தை மன்றம் (என்என்எப்) சார்பில் தங்கப் பதக்கம் பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
உலகில் மிகவும் புனிதமாக கருதப்படுவது தாயுக்கும் குழந்தைக்குமான உறவு. ஒரு குழந்தை பிறந்து நன்கு வளர்ந்து மரணம் சம்பவிக்கும் வரையிலான காலக்கட்டம் வரை, அக்குழந்தை கருப்பையில் இருக்கும் போது ஊட்டச்சத்துடன் வளர்வதைப் பொருத்தே, உடல் ஆரோக்கியம் கணிக்கப்படுகிறது.
பல்வேறு ஆராய்ச்சிகளில் தாயின் தொப்புள் கொடியில் உள்ள `ஸ்டெம் செல்’ அந்த குழந்தைக்கு பிற்காலத்தில் ஏற்படும் எந்தவொரு நோய்க்கும், எதிர்ப்பு சக்தி அளிக்கக் கூடிய மருத்துவ குணம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. உலக அளவில் `ஸ்டெம்செல்’ சேமித்து வைக்கும் வங்கிகள் இயங்கி வருகிறது. இந்த ஸ்டெம்செல் சேமிப்பு வங்கியில், தொப்புள் கொடியை பாதுகாக்க ஆண்டுக்கு பல ஆயிரம் செலவு செய்ய வேண்டும். இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள செல்வந்தர்களால் மட்டுமே இயலும்.
தாயின் தொப்புள் கொடியில் உள்ள குருதி, பிறந்த உடன் குழந்தைக்கு முழுமையாக சென்றடைவதனால் ரத்தசோகை நோய் எதிர்ப்பு, நோய் எதிர்ப்பு சக்தி, அதிக ரத்தம் ஊருதல், இரும்பு சத்து கிடைப்பதாக அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறந்தவுடன் இரண்டு நிமிடங்களுக்கு பின்னரே தொப்புள் கொடியை வெட்டி அகற்ற வேண்டும் என்பதை உலக சுகதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஆனால், குழந்தை பிறந்து இரண்டு நிமிடங்கள் வரை தொப்புள் கொடி அகற்றாமல் இருப்பதால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குழந்தைக்கு மூச்சு திணறல், உடல் சுகவீனம், குறை பிரசவம் உள்ளிட்ட காரணங்களால், மருத்துவர்கள் உடனடியாக தொப்புள் கொடியை வெட்டி அகற்றி விடுகின்றனர். இதனால், தொப்புள் கொடியில் உள்ள குருதி, முழுமையாக குழந்தைகளுக்கு சென்றடைவதில்லை.
எனவே, குழந்தைகளுக்கு பிற்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, ரத்த சோகை நோய் தாக்குதல், இரும்பு சத்து குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
குழந்தைக்கு தொப்புள் கொடி குருதி முழுமையாக சென்றடைவது குறித்து புதிய ஆராய்ச்சியில், சேலம் அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜி கடந்த மூன்று ஆண்டுகளாக ஈடுபட்டிருந்தார். பிரசவித்தவுடன் தாயின் தொப்புள் கொடியை கைகளால் பீய்ச்சி குருதியை குழந்தைக்கு முழுமையாக கிடைக்க செய்வது சம்பந்தமாக டாக்டர் பாலாஜி ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதற்காக மொத்தம் 103 குழந்தைகளை, பெற்றோர்களின் சம்மதத்துடன் ஆராய்ச்சி மேற்கொண்டார்.
இதில் இரண்டு நிமிடம் காலதாமதமாக தொப்புள் கொடியை வெட்டி அகற்றுவதன் மூலம் குழந்தைக்கு கிடைக்க கூடிய குருதி மாற்றமும், உடனடியாக பீய்ச்சி குருதி மாற்றத்தை ஏற்படுத்துவதின் அளவீடும் ஒன்றாக இருந்தது ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டது. காலதாமதமில்லாமல் தொப்புள் கொடி குருதியை தாயிடம் இருந்து சேய்க்கு முழுமையாக கிடைக்கவும், அதனால் பலன் ஏற்படுவதை ஆராய்ச்சி முடிவில் தெரிவித்து இருந்தார்.
தேசிய பச்சிளம் குழந்தை மன்றம் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாநிலத்தில் பச்சிளம் குழந்தைகள் நோய் குறித்த கருத்தரங்கை நடத்தி வருகிறது. இதில் இந்தியா முழுவதும் உள்ள பச்சிளம் குழந்தை மருத்துவர்கள் கலந்து கொள்வார்.
இந்த தேசிய கருத்தரங்கில் பச்சிளம் குழந்தை சார்ந்த ஆராய்ச்சிக்கட்டுரையை மருத்துவர்கள் சமர்ப்பிப்பார்கள். தேர்வு செய்யப்படும் ஆராய்ச்சி கட்டுரைக்கு தங்கப் பதக்கம், சான்றிதழ் அளித்து மருத்துவர்கள் கவுரவிக்கப்படுவர். இந்தாண்டு பீகார் மாநிலம் பாட்னாவில் தேசிய பச்சிளம் குழந்தை மன்றம் நடத்திய கருத்தரங்கில், சேலம் அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜி, தொப்புள் கொடியில் இருந்து குழந்தைக்கான குருதி மாற்றம் குறித்து ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார். இந்த கட்டுரைக்கு தங்க பதக்கம் பிரிவில் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. தொடர் ஆராய்ச்சிகள் மூலம் வருங்காலத்தில் தொப்புள் கொடி குருதி மாற்றத்தால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்திடும் நற்பலன் கிடைக்க வழி வகை ஏற்பட்டுள்ளதாக, சேலம் அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் டாக்டர் பாலாஜி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT