Published : 23 Feb 2015 09:38 PM
Last Updated : 23 Feb 2015 09:38 PM

கோடைக்கால மின்வெட்டை சமாளிக்க இன்வெர்ட்டர்

கோடைகாலம் தொடங்கிவிட்டது. தேர்வு நாட்களும் ஆரம்பமாகிவிட்டது. கூடவே மின்தடை குறித்த பேச்சுகளும் தொடங்கிவிட்டது. ’’போன கோடையை சமாளிக்க பட்டபாடு இருக்கே அப்பப்பா’’ என ஒவ்வொரு கோடை காலத்திலும் அலுத்துக் கொண்டே கடக்கப் பழகிவிட்டோம்.

மின்தடை அப்படி பாடாய் படுத்துகிறது. வெயிலின் உக்கிரம் தொடங்கும்போதே மின்தட்டுப்பாடும் தொடங்கிவிடுகிறது. மின்சாரம் இல்லாமல் ஒரு மணி நேரம் கூட வாழ முடியாது என்கிற நிலைமையில் குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீடுகளில் சொல்லவே வேண்டாம். மின்தட்டுப்பாடு பெரும் அவஸ்தைதான்.

அவசரத்துக்கு சட்னிகூட வைக்க முடியாது என்பதுதான் பெரும்பாலான இல்லத்தரசிகளின் அனுபவம். இரவு நேரங்களில் இருளில் மூழ்கும் வீடுகள். சிறு தொழில் செய்பவர்களுக்கு வருமானம் குறையும் என பல ரூபங்களில் மின் தட்டுபாடு வேலை காட்டும். இதை தவிர்க்க என்ன செய்வது என முன் கூட்டியே திட்டமிட்டால் இந்த கோடையின் மின்தட்டுபாட்டை சமாளித்து எளிதாகக் கடக்கலாம்.

மின்தட்டுப்பாடை சமாளிக்கவோ, மின் உற்பத்தி செய்து கொள்ளவோ ஜெனரேட்டர், சோலார் சாதனங்கள் என மாற்று முறைகள் இருக்கிறதுதான். ஆனால் எத்தனை பேருக்கு சாத்தியம். ஜெனெரேட்டர் வீடுகளில் பயன்படுத்துவதற்கு இலகுவானதல்ல, பராமரிப்பு மற்றும் இயக்கு செலவுகள் அதிகம். டீசல் விற்கும் விலையில், இருட்டிலேயே இருந்து கொள்ளலாம் என முடிவெடுத்து விடுவீர்கள்.

சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளலாம். இதன்மூலம் மரபு வழியிலான மின்சாரத்தை நம்பிக்கொண்டிருக்க தேவையில்லைதான். ஆனால் எல்லோருக்கும் சாத்தியமில்லை. இதை அமைத்துக் கொள்வதற்கான செலவு அதிகம்.

சரி இதற்கு வேறு என்னதான் தீர்வு என்கிறீர்களா...

இன்வெர்ட்டர் இருக்க பயம் வேண்டாம்.

சின்ன அலுவலகம், வீடுகளுக்கு அவசரகால மின் தேவைகளுக்கு கை கொடுக்கும் இன்வெர்ட்டர்கள். இது மின்சாரத்தை சேமித்து வைத்துக்கொண்டு தேவையான போது கொடுக்கும் கருவி என்பதால், மின்தடை ஞாபகத்துகே வராது. மின் தடை ஏற்பட்ட தானாகவே இது ஆன் ஆகிவிடும், அதுபோல மின்தடை நீங்கியதும் ஆப் ஆகிவிடும். கூடவே மின்சாரத்தை சேமிக்கவும் தொடங்கிவிடும்.

அதிக நேரங்கள் நீடிக்கும் மின் தட்டுப்பாட்டை இதன் மூலம் சமாளிக்கலாம். பராமரிப்பு குறைவு, சத்தமில்லமல் இயங்கும் தன்மை கொண்டது. இதற்கென தனியாக இடத்தை ஒதுக்க தேவையில்லை.

இன்வெட்டரின் கெப்பாசிட்டிக்கு ஏற்ப பேன். லைட், மிக்ஸி போன்ற சாதனங்களை இயக்கலாம். சத்தமில்லாமல் இயங்குவதால் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் இருக்கும் வீடுகளில் அவர்களுக்கு தொந்தரவு இல்லாமலும் பயன்படுத்த முடியும். பிள்ளைகள் படிக்கும் நேரத்தில் கரண்ட் கட் ஆகிவிட்டாலும் கவலையில்லை.

செலவு பராமரிப்பு

இன்வெர்ட்டர்களை வாங்குவதும் எளிது. பிராண்டட் இன்வெர்ட்டகளும், சிறிய நிறுவன தயாரிப்புகளும் சந்தையில் கிடைக்கின்றன. நமது தேவை மற்றும் வசதிக்கு ஏற்ப தேர்ந்தெடுத்து கொள்ளலாம். பெரும்பாலும் விற்பவர்களே சர்வீஸ் செய்து கொடுத்து விடுவார்கள். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பேட்டரியின் ஆசிட் மாற்ற வேண்டும்.

இன்வெர்ட்டர்களின் நெகட்டிவ் விஷயம் என்னவென்றால் இன்வெர்ட்டர் பேட்டரியின் ஆயுட்காலம் மூன்று அல்லது நான்கு வருடங்கள்தான். அதற்கு பிறகு வேறொரு பேட்டரி வாங்க வேண்டும். மேலும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆசிட் மாற்ற வேண்டும்.

ஆனால் கோடைக்கால மின் தட்டுப்பாடை சமாளிக்கும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இன்வெர்ட்டர் மாறிவிட்டது என்பதுதான் உண்மை. எனவே மின் தட்டுப்பாட்டை இன்வெர்ட்டர்கள் துணைக் கொண்டு சமாளிப்போம். அதற்கு இப்போதே திட்டமிட வேண்டும் என்பதை புரிந்து கொள்வோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x