Published : 22 Feb 2015 12:51 PM
Last Updated : 22 Feb 2015 12:51 PM

தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு மூலம் பொறியியல், மருத்துவ படிப்புக்கு சேர்க்கை: சென்னை சவீதா பல்கலைக்கழகம் அறிமுகம்

தேசிய அளவில் நடத்தப்படும் சிறப்பு நுழைவுத்தேர்வு அடிப்படையில் பொறியியல், மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களைச் சேர்க்க சென்னை சவீதா பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது.

சென்னை சவீதா பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு வரை தானாக நுழைவுத்தேர்வு நடத்தி தொழில்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை மேற் கொண்டு வந்தது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு (2015-2016) முதல் இஆர்ஏ ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு தேசிய அளவில் நடத்தவுள்ள நுழைவுத்தேர்வு அடிப்படையில் பொறியியல், மருத்துவ, பல்மருத்துவ படிப்பு களுக்கு மாணவர்களைச் சேர்க்க உள்ளது.

இதுகுறித்து இஆர்ஏ ஃபவுண்டேஷன் நிர்வாகி பி.என்.சுப்ரமணியம் கூறியதாவது:-

எங்கள் அமைப்பு நடத்தும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணை சவீதா பல்கலைக்கழகம் உட்பட 10 பல்கலைக்கழகங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. பொறியியல், மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு ஏப்ரல் 26-ம் தேதி நடத்தப் படும். தேர்வுக்கான பாடத் திட்டம் சிபிஎஸ்சி-யை மட்டு மல்லாமல் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களின் பாடத்திட்டங்களையும் கணக்கில்கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது. மாணவர்களின் ஆராயும் திறனை சோதிக்கும் வகையில் கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.

இந்த தேர்வுக்கு ஏப்ரல் 4-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஏப்ரல் 26-ம் தேதி ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டு 29-ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சவீதா பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் மைதிலி பாஸ்கரன் கூறும்போது, “பொறி யியல் படிப்பில் 650 இடங்களும், மருத்துவ படிப்பில் 100 இடங்களும், பல்மருத்துவத்தில் 150 இடங்களும் இந்த சிறப்பு நுழைவுத்தேர்வு மூலமாக நிரப்பப்படும். நுழைவுத்தேர்வு மதிப்பெண், பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்” என்றார்.

பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் என்.எம்.வீரையன் கூறும்போது, “பிளஸ் டூ முடிக்கும் மாணவர்கள் வெவ்வேறு கல்வி நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கும்போது ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே நுழைவுத்தேர்வு நடத்துவதால் காலவிரையம் ஏற்படுகிறது. அதை தவிர்க்கும் வகையில் ஒரே நுழைவுத்தேர்வு மூலம் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதால் இந்த புதிய முறையைக் கொண்டுவந்துள்ளோம்” என்றார்.

பல்கலைக்கழக இயக்குநர் சவீதா கூறும்போது, “நுழைவுத் தேர்வு எழுதினாலும், பிளஸ் டூ தேர்வில் குறிப்பிட்ட பாடங் களில் 90 சதவீத மதிப்பெண் பெறும் மாணவர்கள் மட்டுமே அட்மிஷனுக்கு பரிசீலிக்கப் படுவர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x