Published : 05 Feb 2014 09:50 AM
Last Updated : 05 Feb 2014 09:50 AM

விருதுநகரில் களமிறங்குகிறார் வைகோ?- அதிமுக சார்பில் மாஃபா பாண்டியராஜை நிறுத்த திட்டம்

கடந்த தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட வைகோ, இந்தமுறை மோடி அலையை நம்பி மீண்டும் அங்கே களமிறங்குகிறார்.

விருதுநகர் மாவட்ட மக்களோடு சொந்தபந்தங்களைபோல் உறவு முறை பழக்கத்தில் இருப்பவர் வைகோ. சிவகாசி பகுதியில் பட்டாசு தொழிற்சாலைகள் ஏற்றுமதியில் சாதனை புரிவதற்கும் விவசாயம் பொய்த்த விருதுநகர் மக்கள் தீப்பெட்டித் தொழிலை நம்பி கொஞ்சம் கஞ்சியாவது குடிப்பதற்கும் அரசாங்க ரீதியிலான பல உதவிகளை செய்தவர் வைகோ.

16 ஆயிரம் ஓட்டில் தோற்ற வைகோ

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டத்தில் வைகோ ஏற்பாட்டில் நடத்தப்பட்ட மஞ்சள் காமாலை தடுப்பூசி முகாம், கண் சிகிச்சை முகாம், மாற்றுத் திறனாளிகளுக்கான அறுவைச் சிகிச்சை முகாம் உள்ளிட்ட சேவைகளை நடுநிலையாளர்கள் இன்றளவும் பாராட்டுகிறார்கள். ஆனால், கடந்த தேர்தலில் இவை எல்லாம் வைகோவுக்கு கை கொடுக்கவில்லை. இத்தனைக்கும் கடைசி நிமிடத்து இறக்குமதி வேட்பாளராகத்தான் மாணிக்கம் தாகூரை இங்கு நிறுத்தியது காங்கிரஸ். ஆனால், ஆதரவாக அதிமுக ஓட்டு வங்கி இருந்தும் 16,764 ஓட்டில் தாகூரிடம் தோற்றுப் போனார் வைகோ. அந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட நடிகர் கார்த்திக் 17,333 ஓட்டு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின் இட்ட கட்டளை

வைகோ தோற்கடிப்பட்டதன் பின்னணியில் முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரின் கடின உழைப்பு இருந்தது. எக்காரணம் கொண்டும் வைகோ ஜெயிக்கக் கூடாது என்பது ஸ்டாலின் அவருக்கு இட்டிருந்த கட்டளை. திமுக-வினரின் பட்டுவாடா விவகாரங்களை கண்டும் காணாமல் இருப்பதற்காகவே ஸ்டாலினுக்கு நெருக்கமான ஆட்சியர் விருதுநகரில் பணியமர்த்தப்பட்டார். ‘அவங்க ஓட்டுக்கு பணம் குடுக்குறாங்களே’ என்று வைகோவிடம் கட்சியினர் சொன்னபோது, ’நாம் ஒன்றும் ஊழல் செய்து பணம் சம்பாதித்து வைத்திருக்கவில்லை. அப்படி பணம் கொடுத்து ஜெயிக்கும் அவசியமும் எனக்கில்லை’ என்று சிடுசிடுத்தார் வைகோ. பணம் பாதாளம் வரை பாய்ந்ததுதான் தனது தோல்விக்கு காரணம் என்பதை தாமதமாகத்தான் புரிந்துகொண்டார் வைகோ.

வைகோவுக்கு நிதி திரட்டும் பெரும்புள்ளிகள்

இந்நிலையில், மீண்டும் விருதுநகர் மக்களை நம்பி களத்துக்கு வருகிறார் வைகோ. இம்முறை அவர் பழைய கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். கடந்தமுறை அவரது நாயுடு சமூகத்தைச் சார்ந்த பெரும்புள்ளிகள் வைகோவை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், இந்தமுறை இனம் ஒன்று கூடுகிறது. நிதி ஆதாரத்தை திரட்டுவதற்காக கோவையிலுள்ள பிரபல மில்லின் உரிமையாளர் தலைமையில் ஒரு குழு களமிறங்கி இருக்கிறது.

மாஃபா பாண்டியராஜன் அதிமுக வேட்பாளர்?

கடந்தமுறை வைகோவுக்காக வேலைபார்த்த அதிமுக-வினர் இந்த முறை அவரை எதிர்த்து வேலை செய்யப் போகிறார்கள். அதிமுக தரப்பில் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ-வான மாஃபா பாண்டியராஜன்தான் வேட்பாளர் என்கிறார்கள். அதிமுக முகாமுக்கு அழைத்தபோது, ’எனக்கு காசு பணம் எதுவும் வேண்டாம்; எம்.பி. சீட் மட்டும் வாங்கிக் கொடுங்கள்’ என்று ஓ.பி.எஸ்-ஸிடம் உத்தரவாதம் வாங்கிக் கொண்டுதான் ஜெயலலிதாவை சந்திக்க சம்மதித்தாராம் பாண்டியராஜன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக வேட்பாளர்களிலேயே அதிகப்படியான ஓட்டுகளை வாங்கியவர் பாண்டியராஜன். இவரே அதிமுக வேட்பாளர் என்றால் வைகோ கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது நிச்சயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x