Published : 01 Apr 2014 09:33 AM
Last Updated : 01 Apr 2014 09:33 AM

வாகன காப்பீடு தொகை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு: பணிந்தது மத்திய அரசு: இந்த ஆண்டுக்கு 10% மட்டுமே உயர்த்த முடிவு

வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டுத் தொகையை மிக அதிகமாக உயர்த்தும் அரசின் முடிவுக்கு லாரி உரிமையாளர்கள் தெரிவித்த கடும் எதிர்ப்பு காரணமாக இந்த ஆண்டில் 10 சதவீதம் மட்டுமே காப்பீட்டுத் தொகையை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

வாகன விபத்தில் காயமடைபவர்கள் மற்றும் இறப்பவர்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டுத் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு விபத்தில் காயமடைபவர்கள் மற்றும் இறப்பவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக மூன்றாம் நபர் காப்பீட்டுத் தொகை ஆண்டுதோறும் 10 சதவீதம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு தனியார் பயன்பாட்டிற்கு இயக்கப்படும் வாகனங்களுக்கு 137 சதவீதமும், பொது பயன்பாட்டிற்கான வாகனங்களுக்கு 107 சதவீதமும் காப்பீட்டுத் தொகை உயர்த்தப்படும் என அரசு தெரிவித்தது. விபத்துகளும், விபத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதே காரணம் என மத்திய அரசு விளக்கமும் அளித்தது.

இதற்கு, லாரி உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைக் கண்டித்து போராட்டம் அறிவிக்கவுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், காப்பீட்டுத் தொகையை பல மடங்கு உயர்த்தும் முடிவை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. ஆண்டுதோறும் வசூலிப்பதுபோல் காப்பீட்டுத் தொகை 10 சதவீதம் மட்டுமே உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தலைவர் ஆர்.சுகுமாரிடம் கேட்டபோது, ‘‘வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டுத் தொகையை ஆண்டுதோறும் 10 சதவீதம்தான் உயர்த்த வேண்டுமென சட்டம் உள்ளது. ஆனால், 2014-15 ஆண்டிற்கு மட்டுமே 107 சதவீதம் உயர்த்தப்பட்டு, அது ஏப்ரல் 1-ம் தேதிமுதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்தது. இதை எதிர்த்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தோம்.

இந்நிலையில், இந்த புதிய அறிவிப்பை மத்திய அரசு கைவிட்டுள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். எங்களின் போராட்ட முடிவை கைவிட்டுள்ளோம்’’ என்றார்.

வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டுத் தொகையை ஆண்டுதோறும் 10 சதவீதம்தான் உயர்த்த வேண்டுமென சட்டம் உள்ளது. ஆனால், இந்த ஆண்டுக்கு மட்டுமே 107 சதவீதம் உயர்த்தி, அது ஏப்ரல் 1-ம் தேதிமுதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x