Published : 21 Feb 2015 10:31 AM
Last Updated : 21 Feb 2015 10:31 AM

நீதிமன்றத்தின் மாண்பைக் காக்கும் கடமை வழக்கறிஞர்களுக்கு உண்டு: தலைமை நீதிபதி கருத்து

150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்பைக் காக்கும் கடமை வழக்கறிஞர்களிடம் உள்ளது என்று தலைமை நீதிபதி சஞ்ஜய் கிஷன் கவுல் கூறியுள்ளார்.

மெட்ராஸ் பார் அசோசியேஷன் சார்பில், வழக்கறிஞர் ஏ.ஏ.மோகன் பெயரில் நிறுவப்பட்டுள்ள நூலகப் பிரிவு திறப்பு விழா உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பார் அசோசியேஷனின் தலைவர் கே.ஆர்.தமிழ்மணி தலைமை வகித்தார். செயலாளர் வி.ஆர்.கமலநாதன் முன்னிலை வகித்தார். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜய் கிஷன் கவுல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நூலகப் பிரிவை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சஞ்ஜய் கிஷன் கவுல் பேசியதாவது:

சிறந்த வழக்கறிஞர்களை கவுரவிப்பதில் மெட்ராஸ் பார் அசோசியேஷன் சிறப்பான பங்காற்றி வருகிறது. ஒவ்வொரு முறையும் இந்த நூலகத்துக்கு வந்து இப்பிரிவை காணும் போது வழக்கறிஞர் மோகனின் நினைவுகள் நமக்கு வரும். மோகன் சிறந்த வழக்கறிஞர் மட்டுமின்றி பழமைவாய்ந்த கலைப் பொருட்களை சேகரிக்கும் ஆர்வமும் உள்ளவர்.

150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்பை காக்கும் கடமை நீதிபதிகளிடம் இல்லை. மாறாக, வழக்கறிஞர்களிடம் உள்ளது. வழக்கறிஞர்கள் சிலர் தங்களு டைய கோரிக்கைகளுக்காக நீதிமன்றத்துக்குள் நுழைந்து கூச்சலிடுகின்றனர். அவர்களது இச்செயல் என்னை எவ்விதத்திலும் பாதிக்காது. மாறாக, நீதிமன்றத்தின் மாண்பை பாதிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மெட்ராஸ் பார் அசோசியேஷன் உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x