Published : 17 Jan 2015 12:17 PM
Last Updated : 17 Jan 2015 12:17 PM
"ஜல்லிக்கட்டு மேற்கத்திய கருத்தாக்கம். இந்த விளையாட்டால் விலங்குகளும், மனிதர்களும் உயிரிழக்க நேர்கிறது. எனவே பாஜக அதை எதிர்க்கிறது" என அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், மத்திய அமைச்சர் ஒருவர் இத்தகைய கருத்தை வெளியிட்டிருக்கிறார்,
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான பிலிபிட்டிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி.
அங்கு அவர் பேசியதாவது:
அறுவடைத் திருநாள் என்பது நமக்கு உணவளிக்கு மரங்களுக்கும், செடிகளுக்கும் நன்றி தெரிவிப்பதாக இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு என்ற போர்வையில் அடாவடித்தனத்துடன் ஆரம்பிக்கிறது பொங்கல் விழா. இது மிகவும் தவறானது.
ஜல்லிக்கட்டு என்ற விளையாட்டு மேற்கத்திய கருத்தாக்கம். இதனால் விலங்குகளும், மனிதர்களும் உயிரிழக்க நேர்கிறது. எனவே பாஜக ஜல்லிக்கட்டு விளையாட்டை எதிர்க்கிறது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது.
மாடுகளும், காளைகளும் மனிதர்களுக்கு உதவியாகவே இருக்கின்றன. அவற்றை விளையாட்டு என்ற போர்வையில் துன்புறுத்தக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் தமிழகத்தில் அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய பகுதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) கடை அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பை வெளிப்படுத்தினர் என்பது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT