Published : 12 Feb 2014 12:00 AM
Last Updated : 12 Feb 2014 12:00 AM
தொகுதிப் பங்கீடு உடன்பாடு எட்டப்படாததாலேயே பாஜக கூட்டணியில் சேர வேண்டாமென்று, தேமுதிக முடிவெடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக தலைமையிலான கூட்டணியில், மதிமுக, ஐஜேகே, கொமதேக, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பிடித்துள்ளன. பாமக-வின் நிலை இன்னும் சரியாகத் தெரியவில்லை, தேமுதிக பாஜக பாதையிலிருந்து விலகி காங்கிரஸ் திசையில் நகர ஆரம்பித்திருக்கிறது. பாஜக கூட்டணியில் தேமுதிக இடம் பெறாமல் போனதற்கான காரணங்கள் குறித்து தேமுதிக, பாஜக வட்டாரங்களில் கிடைத்த தகவல்கள்:
பாஜக அணியில் மதிமுக-வுக்கு 10 முதல் 12 தொகுதிகள் வரை கேட்கிறார்கள். கொமதேக, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்குவது என தொகுதிப் பங்கீடு பேச்சு நடந்துள்ளது.
இதுதவிர, பாமகவுக்கு ஏற்கெனவே வேட் பாளர் அறிவிக்கப்பட்ட 10 தொகுதிகளும் அவர்களுடன் இணைந்து பணியாற்றும் சாதி அமைப்புகளுக்கு மூன்று முதல் ஐந்து தொகுதிகளும் கேட்கப்பட்டுள்ளன. இந்தக் கட்சிகள் மட்டுமே 33 தொகுதிகளை கேட்கின்றன. கூட்டணிக்குத் தலைமை தாங்கும் பாஜக 10 இடங்களில் கண்டிப்பாக போட்டியிட முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், பாஜக கூட்டணிக்கு வருவதாக இருந்தால் எங்களுக்கு 15 தொகுதிகள் வேண்டும் என தேமுதிக கேட்டிருக்கிறது. மேலும், தேமுதிகவே கூட்டணிக்கு தலைமை ஏற்கும், கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக அலுவலகத்துக்கு, பாஜக மேலிடத் தலைவர்கள் உட்பட நிர்வாகிகள் வர வேண்டும், தேர்தல் பிரச்சார செலவுகளை பாஜகவே கவனித்துக் கொள்ள வேண்டும் என ஏகப்பட்ட நிபந்தனைகளை தேமுதிக இரண்டாம் கட்டத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
கூட்டணிக்கு தலைமை தேமுதிக என்பதை பாஜக ஏற்றுக் கொண்டாலும் அவர்களுக்கு 15 தொகுதிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால், பாமக இல்லாத கூட்டணியை அமைக்கலாம் என்று தேமுதிக தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கையை பாஜக நிராகரித்துவிட்டதாகத் தெரிகிறது. மாறாக தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள தொகுதிகளை பாஜக, மதிமுக, பாமக உள்ளிட்ட இதரக் கட்சிகள் பிரித்துக் கொள்ளலாம் என்று யோசனை தெரிவித்திருக்கிறது பாஜக.
ஆனால், இதை தேமுதிக ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், சென்னை வந்த மோடி வைகோ-வை சந்திக்க நேரம் ஒதுக்கினார். ஆனால், வைகோ-வைக் காட்டிலும் வலுவான கட்சியை நடத்தும் விஜயகாந்தை அவர் கண்டுகொள்ளவில்லை. இதுவும் விஜயகாந்துக்கு வருத்தம். இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்து விட்டுத்தான் விஜயகாந்த் பிரதமரைச் சந்திக்க அனுமதி கேட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT