Published : 03 Jan 2015 03:04 PM
Last Updated : 03 Jan 2015 03:04 PM
மிலாது நபி திருநாளை முன்னிட்டு கருணாநிதி, வைகோ, ராமதாஸ் ஆகிய தலைவர்கள் தங்கள் வாழ்த்துச் செய்திகளை தெரிவித்துள்ளனர்.
தி.மு.க தலைவர் கருணாநிதி வாழ்த்து:
''நபிகள் நாயகம், இஸ்லாமியத் தத்துவத்தை ஒரு வாழ்க்கை நெறியாக மக்களுக்குப் போதித்தார்; போதித்தபடியே வாழ்ந்து காட்டினார். அவர் எப்பொழுதும் ஏழைகளுக்காக இரக்கப்பட்டார்; அனாதைகளுக்கு ஆதரவு தந்தார்; இவற்றின் காரணமாகவே நபிகள் பெருமானாரிடம் அன்பு கொண்ட பொதுமக்கள் அவரை “அல் அமீன்” எனும் சிறப்புப் பெயர் கொண்டு அழைத்தனர்.இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த மிலாது நபித் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கின்றேன்'' என்று கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து
''அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை மீலாது விழாவாகக் குதூகலமாகக் கொண்டாடிடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு இந்த இனிய நாளில் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.
அனைத்து மத நம்பிக்கை கொண்டோரிடத்திலும் நேசமும் அன்பும் காட்டி அரவணைத்தவர் நபிகள் நாயகம் . இந்திய உபகண்டத்தில் அனைத்து மதத்தினருக்கும் சமமான பாதுகாப்பு வழங்கிடும் மதச் சார்பின்மையை, ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாட்டைப் பாதுகாக்க மீலாது விழா அன்று உறுதி ஏற்போம்'' என்று வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து
''நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை மீலாதுன் நபியாக கொண்டாடும் நாம், அவரது போதனைகளை உண்மையாகப் பின்பற்றுவதே அவருக்கு செலுத்தும் மரியாதையாக இருக்கும். எனவே,அவர் போதித்த அன்பு, அமைதி,சமாதானம், சமய நல்லிணக்கம், தவறு செய்தவர்களை மன்னித்து ஏற்கும் மனப்பான்மை ஆகியவற்றைக் கடைபிடிக்க அவரது பிறந்தநாளான இந்த நன்னாளில் உறுதி ஏற்போம்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT