Published : 09 Feb 2014 05:07 PM
Last Updated : 09 Feb 2014 05:07 PM
நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநில சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழகத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு கள் குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னை யில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் தலைமை யில் நடந்த இந்தக் கூட்டத்தில் தமிழக தலை மைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் உள்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்தபின், நிருபர்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் அளித்த பேட்டி:
நாடாளுமன்றத் தேர்தலுடன் பதவிக்காலம் முடிய உள்ள ஆந்திரா, ஒடிசா மற்றும் சிக்கிம் மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று தலைமைத் தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழகத்தில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள், போலீஸ் பாதுகாப்பு, அரசியல் கட்சிகளின் அணுகுமுறை போன்ற அனைத்து அம்சங்கள் பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது.
டெல்லியில் இன்று கூட்டம்
அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம், டெல்லியில் திங்கள்கிழமை (இன்று) நடக்கி றது. அதன்பின், தலைமைச் செயலாளர்கள் மற்றும் டிஜிபிகளுடனான ஆலோசனைக் கூட்டம் 20-ம் தேதி நடக்கும்.
வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்வது தொடர்பாக ரயில்வே வாரிய தலைவர், ரயில்வே அதிகாரிகள் மற்றும் தகவல் தொடர்புக்காக பிஎஸ்என்எல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். மேலும் தேர்தலில் சம்மந்தப் பட்டுள்ள அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. தேர்தல் பாதுகாப்பு பற்றி ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும்.
இந்தக் கூட்டங்களில் தேர்தலை எத்தனை கட்டங்களாக நடத்துவது, எவ்வளவு வாக்குச்சாவடிகளை அமைப்பது, வாக்குச்சாவடி நீளம், அகலம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு, ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் வாக்குப்பதிவு தகவல்களை பெறுவது, வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகள் போன்றவை பற்றி ஆலோசனை நடத்தப்படும். அதன்பின், தேர்தல் தேதி அறிவிக்கப்படும்.
டிஜிபி மாற்றப்படுவாரா?
கடந்த 4-ம் தேதி நடத்த அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் வேட்பாளர்களின் தேர்தல் செலவு உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும். தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் தமிழக டிஜிபி ராமானுஜத்தை மாற்றம் செய்யும்படி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இவை குறித்து ஆணையம் பரிசீலித்து வருகிறது. உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்.
இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 10-ம் தேதி வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 27 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்துள்ளனர். குறிப்பிட்ட முகவரியில் இல்லாத 10 லட்சம் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளோம். அவர்கள் அனைவரையும் போலி வாக்காளர் என்று சொல்ல முடியாது. பெயர் நீக்கப்பட்டவர்கள் உரிய ஆவணத்தை கொடுத்து வாக்காளர் பட்டியலில் சேரலாம்.
தமிழகத்தில் 100 சதவீத வாக்காளர் பட்டியல் தயாராக உள்ளது. தேர்தலுக்கு ஓரிரு நாள் முன்பு புகைப்படத்துடன் கூடிய சிறிய சீட்டு வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும். வாக்களிக்க வேறு ஆவணங்கள் தேவையில்லை.
இவ்வாறு சம்பத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT