Published : 02 Jan 2015 04:31 PM
Last Updated : 02 Jan 2015 04:31 PM
மாநகராட்சி பள்ளிகள் மூடப்படுவதை எதிர்த்தும், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட வலியுறுத்தியும் இம்மாதம் 7-ம் தேதி, சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முற்றுகைப் போராட்டம் நடத்துகிறது.
இதனை, அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு கோடி மக்கள் வசிக்கும் சென்னை மாநகரத்தில் தற்போது ஒரு சதவீத மாணவர்களுக்கே அரசு மற்றும் சென்னை மாநகராட்சி பள்ளிகள் கல்வி அளித்து வருகிறது. சென்னை மாநகராட்சி நிர்வாகம் 30 மழலையர் பள்ளிகள், 122 தொடக்கப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 32 மேல்நிலைப் பள்ளிகள் என 284 பள்ளிகளில் 98,857 மாணவர்களுக்கு கல்வி வழங்கி வருகிறது.
அதிகரித்து வரும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, புதிய பள்ளிகளை தொடங்குவதற்கு மாறாக 50க்கும் மேற்பட்ட பள்ளிகளை மாணவர் வருகை குறைவு என்று காரணம் காட்டி மாநகராட்சி நிர்வாகம் மூடியுள்ளது. மேலும் சில பள்ளிகளை மூடும் ஆலோசனையும் உள்ளது. மூடப்படும் பள்ளி செயல்படும் இடத்தை அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் செயல்பாட்டுக்கு மாற்றும் முயற்சியும் உள்ளது.
கல்விக்காக பெரும் தொகையை செலவிட முடியாத ஏழை மக்களின் குழந்தைகள், கல்வி கற்பதற்கு வாய்ப்பற்றவர்களாக மாற்றப்பட்டு வருகின்றனர். காசு உள்ளவர்கள் மட்டுமே கல்வி பெற முடியும் என்கிற நிலை உருவாகியுள்ளது. கல்வி உரிமைச் சட்டம், தனியார் பள்ளிகள் 25 சதவிகிதம் ஏழை மாணவர்களுக்கு கல்வி அளிக்க வேண்டும் என்பதை எந்த தனியார் கல்வி நிறுவனங்களும் அமல்படுத்துவதில்லை என்பதோடு, அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட கூடுதல் கட்டணத்தை வசூலித்துக் கொள்ளையடித்து வருகின்றனர்.
வருடாந்திர மாநகராட்சி பட்ஜெட்டில் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி முழுவதும் முறையாக செலவிடப்படுவதில்லை. கடந்த எட்டு ஆண்டுகளில் கல்விக்கென வசூலிக்கப்பட்ட 2.5 சதவிகிதம் வரித் தொகையில் (ரூ.175 கோடி) சிறு தொகை மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
நல்ல சமூகத்தை கட்டமைத்திட, தரமான இலவசக் கல்வி அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, தரம் உயர்த்தி ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்து மாணவர்களுக்கு தரமான இலவச கல்வி அளிக்கும் கடமையை நிறைவேற்ற மறுப்பதாகவே மாநகராட்சி நிர்வாகத்தின், அரசின் அணுகுமுறை உள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கி கல்வியளிக்க வேண்டிய கடமையை கூட அரசு முறையாக நிறைவேற்றுவதில்லை.
தற்போது மாநகராட்சி பள்ளிகளில் அறிவியல், கணக்கு, ஆங்கிலம் மற்றும் உடற்பயிற்சிக்கான 168 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. மாணவர்கள் வருகையை அதிகப்படுத்தும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட ஆங்கில வழிக் கல்விக்கும் தேவையான மொழியாசிரியர்களை நியமிக்கவில்லை.
சுமார் 120-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் குடிநீர் – தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் குறிப்பாக மாணவிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனால் மாணவிகளின் இடைநிற்றல் எண்ணிக்கை அதிகரித்து அவர்களின் கல்வி தடைபடுகிறது. கல்வி கற்பதற்கு தேவையான சூழலையும், அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தினால் ஏழை, எளிய குடும்பத்து மாணவர்களின் கல்வித்திறனையும், தகுதியையும் மேலும் வளர்த்தெடுக்க முடியும்.
மாநகர் மழலையர் பள்ளிகள் தேவையான அளவு இல்லாததால் தனியார் பள்ளி நோக்கி மாணவர்கள் செல்லும் நிலையும் , இதன் தொடர்ச்சியாக தனியார் பள்ளிகளிலேயே படிப்பை தொடரும் நிலையும் உள்ளது. எனவே, அனைத்து ஆரம்பப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை தொடங்கி தரமான கல்வியை உறுதி செய்வதன் மூலம் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியும். தனியார் பள்ளிகளை நோக்கி ஏழை, எளிய குடும்பத்து மாணவர்கள் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.
மக்கள் தொகை உயர்வுக்கு ஏற்ப கூடுதல் பள்ளிகளை திறக்க வேண்டிய தருணத்தில் தற்போதுள்ள பள்ளிகளை மூடுவதும், கல்வியை தனியாருக்கு தாரை வார்ப்பதும், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை முறையாக செயல்படுத்த மறுப்பதும், அரசியல் சாசனத்திற்கும், உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கும் எதிரானதாகும்.
மாநகராட்சி பள்ளிகள் மூடப்படுவதை எதிர்த்தும், மழலையர் பள்ளிகள் தொடங்கிடவும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும் வலியுறுத்தி வருகிற 2015 ஜனவரி 7, காலை 10 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT