Published : 05 Jan 2015 09:06 PM
Last Updated : 05 Jan 2015 09:06 PM
ஸ்டாலினின் வளர்ச்சியைக் கண்டு, தாங்கிக் கொள்ளாமல், வயிற்றெரிச்சலின் காரணமாக மு.க.அழகிரி கருத்து தெரிவித்திருப்பதாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
திருடர்கள் திருந்தினால் கட்சிக்குள் திரும்ப வருவேன் என்று மு.க.அழகிரி கருத்து தெரிவித்திருந்தார். அமைப்புச் செயலாளராக உங்கள் பதில் என்ன?
முதலில் மு.க. அழகிரிக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. காரணம், அவர் தி.மு.க.விலேயே இல்லை. அவர் தற்போது தி.மு.க. உறுப்பினர் அல்ல. அவர் தி.மு.க.வைப் பற்றி பேசுவது அவருக்கு அழகு அல்ல. இருந்தாலும், தி.மு.க.வினரை தாறுமாறாக பேசியிருப்பது இந்த கட்சியில் இருக்கின்ற தொண்டர்களை வேதனை அடையச் செய்திருக்கிறது. காரணம், அவர் தி.மு.க.வைப் பார்த்து - தி.மு.க.வில் இருப்பவர்கள் திருடர்கள் என்று அவர் சொல்வாரேயானால், திருந்த வேண்டியது அவர்தானேயொழிய, தி.மு.க. அல்ல.
கடந்த மூன்றரை ஆண்டு காலமாக ஆளுங்கட்சியின் பல்வேறு நெருக்கடிகளுக்கும் - அடக்குமுறைகளுக்கும் - அராஜகங்களுக்கும் மத்தியில், தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரை பின்பற்றி நடக்கும் இன்றைய கழகத் தொண்டர்கள் பத்தரை மாற்றுத் தங்கங்களாக இருக்கிறார்கள். நடந்து முடிந்த 14-வது கழகத் தேர்தலை, இந்தியாவிலேயே வேறு எந்த அரசியல் கட்சியும் நடத்த முடியாத அளவுக்கு ஜனநாயக முறையில் நடத்தி முடித்திருக்கிறோம். இதில் ஏதேனும் குழப்பம் வரும் என அவர் எதிர்பார்த்திருந்தார்.
ஆனால், அந்த குழப்பம் வராத காரணத்தினால், விரக்தியின் விளிம்பிலேயே நின்று கொண்டு, அவர் எங்களைப் பற்றி பேசியிருக்கிறாரே தவிர, வேறொன்றுமில்லை. அவர்தான் திருந்த வேண்டுமே தவிர, தி.மு.க. திருந்த வேண்டியதில்லை.
பல இடங்களில் அவர் சொல்லியிருக்கிறார். நான் தி.மு.க.வில்தான் உள்ளேன். தி.மு.க. திரும்ப அழைத்தால், நான் திரும்ப போகத் தயாராக இருக்கிறேன்? என்று...
தி.மு.க.வில் இருக்கிறார் என்றால், தி.மு.க. ஏன் அவரை திரும்ப அழைக்க வேண்டும். அவர் சொல்வதிலேயே சர்ச்சையாக இருக்கிறதே? அவர் தி.மு.க.வில் இருந்தால் நாங்கள் அழைக்க வேண்டிய அவசியம் இல்லை.
அதோடு ஸ்டானிலைப் பற்றி, முகவரி இல்லாதவர் என்று சொல்கிறார். முகவரி இருக்கிறது என்று தன்னை காட்டிக்கொள்ளத்தான் அவ்வப்போது பேட்டி கொடுக்கிறார். நாடு மற்றும் கட்சி, இந்த இரண்டுமே அழகிரியை மறந்துவிட்டது. ஆகையால், தான் இருப்பதை காட்டிக் கொள்ள வேண்டும் என்று ஏதாவது ஒரு சர்ச்சையாக ஒரு அறிக்கை கொடுத்தால், அதனை பத்திரிகையில் பெரிதாகப் போடுவீர்கள் என்று - தப்பாக நினைக்கக் கூடாது - பத்திரிகையாளர்களால்தான் அவர் பேட்டியே கொடுக்கிறார். அவர் என்ன பேசினாலும், உறுதியுடன் ஏதாவது ஒரு பத்திரிகையாளரிடம் பேசியிருக்கிறாரா? ஏதும் சொன்னது கிடையாது. எனவே, பத்திரிகையாளர்கள் தொடர்ந்து பேட்டி கேட்பதால்தான், தான் இருப்பதை காட்டிக் கொள்வதற்காக அப்படி ஒரு பதில் சொல்லியிருக்கிறாரே தவிர, வேறொன்றுமில்லை.
கழகத் தொண்டர்கள் மற்றும் முன்னோடிகள் மட்டுமல்ல, அனைத்துக் கட்சித் தலைவர்களும் தளபதி அவர்களை ஒரு அங்கீகரிக்கப்பட்ட தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஏன், அகில உலக அளவிலேகூட இன்றைய தினம் அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் ஸ்டாலினின் வளர்ச்சியைக் கண்டு, தாங்கிக் கொள்ளாமல், வயிற்றெரிச்சலின் காரணமாக பேசியிருக்கிறாரே தவிர, இவருடைய முகவரியைத்தான் இப்போது தேடுகிறார்கள் பல பேர். எங்கள் ஸ்டாலினின் முகவரியை யாராலும் அழிக்க முடியாது. அவருடைய தியாகம், உழைப்பு மற்றும் தலைவர் கருணாநிதியோடும், பொதுச்செயலாளர் க.அன்பழகனோடும் அவர்களோடும் இணைந்து அவர் கழகத்தை நடத்திச் செல்கின்ற விதம், தொண்டர்கள் முதல் அனைத்து தரப்பினரையும் மனமுருகச் செய்திருக்கின்ற தலைவராக அவர் திகழ்ந்து வருகிறார்.
அழகிரி எதிர்காலத்தில் தி.மு.க.விற்கு அழைக்கப்படுவரா?
அழைக்கப்பட வேண்டிய அவசியமே இல்லை. தி.மு.க. ஒன்றும் மலிவான கட்சி அல்ல. தி.மு.க.வில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். தி.மு.க.வைப் பொறுத்தவரை யாரையும் அழைத்துப் பழக்கம் கிடையாது, அண்ணா காலத்திலேயே இருந்து பெரியாரைத் தவிர வேறு யாரையும் அழைத்தது கிடையாது. அண்ணா, கழகத்தை துவக்கியபோது, அதன் தலைவர் நாற்காலி காலியாக இருக்கிறது. பெரியார் எப்போது வந்தாலும் அதில் உட்காரலாம் என்று சொன்னாரே தவிர, தி.மு.க.வைப் பொறுத்தமட்டில் யாரையும் அழைத்துப் பழக்கம் இல்லை. வந்தாரை வாழ வைக்கும் இயக்கம் தி.மு.க. அவ்வளவுதான்!
அழகிரிக்கு பெரிய அளவில் ஆதரவு இருக்கிறதா, தி.மு.க.வில்?
ஒரு சதவீதம்கூட அவருக்கு ஆதரவு கிடையாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT