Published : 06 Feb 2014 12:00 AM
Last Updated : 06 Feb 2014 12:00 AM
‘குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவேன் என்று வாக்குறுதி கொடுக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்’ – இப்படி வித்தியாசமான பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது இளம் குழந்தைகள் பராமரிப்பு சேவைக் கான கூட்டமைப்பு.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய இளம் குழந்தை பராமரிப்பு சேவைக்கான கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜான் திருநாவுக்கரசு, “தங்களுக்கான உரிமைகளைக் கோர இயலாத 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் உரிமைக்கு தேர்தல் வாக்குறுதியில் முக்கியத்துவம் கொடுப்பதை வேட்பாளர் மத்தியில் வலியுறுத்துவதுதான் எங்கள் முயற்சியின் முதல் கட்டம். ‘உங்கள் குழந்தை நலனுக்கு உத்தரவாதம் அளிக்கும் மக்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுங்கள்’ என்று வாக்காளரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்” என்றார்.
அமைப்பாளரான லயோலா கல்லூரி ஓய்வுபெற்ற பேராசிரியர் சண்முகவேலாயுதம் பேசும் போது, “குறைந்து வரும் பாலின விகிதம், ஊட்டச்சத்து பற்றாக் குறை, குழந்தைகள் மீதான பாலியல் அச்சுறுத்தல் எனத் தொடங்கி 6 வயதுக்குள்ளான குழந்தைகளின் உரிமைக்காக தெருவில் இறங்கியுள்ளோம். 40 நாடாளுமன்றத் தொகுதி களிலும் இதற்கான விழிப் புணர்வு முகாம்கள், ஒத்த கருத்துள்ளவர்களோடு சந்திப்புகள், உள்ளூர் தொண்டு நிறுவன பிரதிநிதிகளுக்கு பயிற்சி, சிறப்பு குழுக்கள் மூலம் களப்பணி போன்றவற்றை மேற்கொள்கிறோம்.
பணம் மற்றும் இலவசப் பொருட்களுக்காக தங்கள் வாக்குகளை விற்கும் வாக்காளர்களிடம் அவர்களுடைய குழந்தைகள் நலனை முன்னிறுத்தி பேசும்போது உருவாகும் மாற்றம், குழந்தை நலனையும் தாண்டி ஒட்டுமொத்த குடிமை சமூகத்திலும் பரவுகிறது. ஆக, நாங்கள் குழந்தைகளை பணயமாக்கவில்லை. மறைமுகமாக திடமான அரசியல் மற்றும் சமூக விளைவுகளை ஏற்படுத்தவும் விரும்புகிறோம்” என்றார்.
நடப்பு அரசியலில் இதெல்லாம் சாத்தியமா.. வாக்குறுதிகள்
ஒன்றே மாற்றத்தை விளை விக்குமா… போன்ற தயக்கங்கள் இவர்களிடம் இல்லை. நடுநிலை வாக்காளரின் எதிர்பார்ப்பில் மாற்றம் விளைவது சுயேச்சை வேட்பாளர் முதல் பெரிய அரசியல் கட்சிகள் வரை பிரதிபலிக்குமென இவர்கள் நம்புகிறார்கள்.
“கடந்த காலங்களில் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களின்போது பிரதான அரசியல் கட்சி தலைமைகளைச் சந்தித்து, தேர்தல் அறிக்கையில் குழந்தைகள் நலம் சார்ந்த கோரிக்கைகள் இடம்பெறும்படி பார்த்துக்கொண்டோம். உதாரணத் துக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நண்பர் நாகநாதன் எங்கள் குரலுக்கு மதிப்பளித்தார். முத்துலட்சுமி ரெட்டி மகப் பேறு உதவித்திட்ட தொகையை உயர்த்துவோம் என்று சொன்ன வர்கள் ஆட்சிக்கு வந்ததும்,
அதை நிறைவேற்றவும் செய்தார்கள்” என்றார் சண்முக வேலாயுதம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT