Published : 04 Jan 2015 10:37 AM
Last Updated : 04 Jan 2015 10:37 AM

திமுக பொருளாளர் பதவியில் இருந்து விலகவில்லை: ஸ்டாலின் விளக்கம்

திமுக பொருளாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யவில்லை என்றும், உண்மைக்கு மாறான வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பொறுப்புகளில் கருணாநிதி, அன்பழகன், மு.க.ஸ்டாலின் ஆகியோர் இருந்து வருகிறார்கள். இவர்களை அந்த பொறுப்புகளுக்கு மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, பொருளாளராக இருக்கும் மு.க.ஸ்டாலின் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவதாகவும், அதனைக் கட்சி தலைமை ஏற்க மறுத்ததால் அதிருப்தியடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும், அவர் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் தகவல்கள் பரவியது.

இதையடுத்து, திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டில் சனிக்கிழமை இரவு முதலே குவியத் தொடங்கினர். இன்று காலையிலும் ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் ஸ்டாலின் வீட்டுக்கு வந்தனர்.

மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திமுகவின் மூத்த நிர்வாகிகளும் மு.க.ஸ்டாலின் வீட்டுக்குள் சென்று அவருடன் ஆலோசனை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னையில் அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் அளித்த விளக்கம்:

"திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய 14-வது உட்கட்சியின் தேர்தல் மிகச் சிறப்பான வகையில் திட்டமிட்டு கிளைக் கழகத்தில் இருந்து தொடங்கி மாவட்டக் கழகம் வரையில் முடிந்திருக்கின்றது.

அதைத் தொடர்ந்து தலைமைக் கழகத்தின் தேர்தல் வருகிற 9 ஆம் தேதி கூடவிருக்கின்ற பொதுக் குழுவில் நடைபெறவிருக்கின்றது. அதற்குரிய வேட்பு மனுத்தாக்கல், 7 ஆம் தேதி அன்று நடைபெற விருக்கின்றது. இதுதொடர்பான செய்தியும் எல்லா நாழிதழ்களிலும் வெளிவந்திருக்கிறது.

இதற்கிடையில், வேண்டுமென்றே திட்டமிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்திலே ஏதேனும் கலகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விஷமத் தனமாக, இதை யாரோ திட்டமிட்டு இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார்கள். இதை நான் வன்மையாகக் கண்டிப்பது மட்டுமல்ல, இதை முழுமையாக மறுக்கிறேன்.

அதுமட்டுமல்ல கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன் என்னிடத்தில், தலைமைக் கழகத்திலே பொருளாளர் பொறுப்புக்கான வேட்பு மனுவை வழங்கி கையெழுத்தும் பெற்றிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து நேற்றைய தினம் வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.காந்தியும், என்னிடத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் எனச் சொல்லி அவர் விரும்பி, அந்த வேட்பு மனுவில் என்னிடத்தில் கையெழுத்து பெற்றிருக்கிறார். எனவே, இந்த நிலையில்தான் தலைமைக் கழகப் பொதுத் தேர்தலை நடத்த இருக்கிறோம்.

அதேபோல், தி.மு.கழகத் தலைவர் பொறுப்பிற்கு தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு க.அன்பழகன் ஆகியோர் போட்டியிட வேண்டும் என்று மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஜெ.அன்பழகன், ஆர்.காந்தி, இன்னும் சில மாவட்டச் செயலாளர்களும் கையெழுத்துக்களைப் பெற்று, வரும் 7ஆம் தேதி மனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

எனவே, இந்த உண்மைகளுக்கு மாறாகவரும் எந்த வதந்திகளையும் யாரும் நம்ப வேண்டிய அவசியமில்லை. வேண்டுமென்றே திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய தொண்டர்களுக்கிடையே, ஒரு குழப்பத்தை விளைவிக்க வேண்டும் என்ற

அடிப்பபடையிலேதான் இந்த காரியம் நடைபெற்று இருக்கிறது என்பதை நான் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார் ஸ்டாலின்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x