Published : 24 Jan 2015 05:37 PM
Last Updated : 24 Jan 2015 05:37 PM

நீலகிரி மாவட்டத்தில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தீர்வாகும் மறு சுழற்சி திட்டம்

நீலகிரியில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தீர்வாகிறது மறுசுழற்சி திட்டம். ஒரு ‘பிளாஸ்டிக்’ பையின் பயன்பாடு, சராசரியாக வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால், அது மக்குவதற்கு ஆகும் காலமோ குறைந்தபட்சம் 100 முதல் 400 ஆண்டுகள். அடிக்கடி வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக் காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக் கொண்டு நாறுவதற்கும், வெள்ளக் காடாவதற்கும் இந்த பிளாஸ்டிக் பொருள்கள் முக்கிய காரணியாக மாறுகின்றன. ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் கொசுக்கள், கிருமிகள் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்புகளை உருவாக்குகிறோம்.

வரும் காலங்களில் கழிவு பிளாஸ்டிக்கால் பல்வேறு பிரச்சினைகள் உலகுக்கு ஏற்படும் என சர்வதேச சுகாதார ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நீலகிரியில் தடை செய்யப்பட்டும், புழக்கத்தில் உள்ள பிளாஸ்டிக் கேரி பேக், டம்ளர், தட்டு உட்பட பொருட்களின் பயன்பாட்டை கட்டுக்குள் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. நீலகிரியில் பல டன் பிளாஸ்டிக் பை உட்பட பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன. கடந்த போகியன்று மட்டும் 30 டன் திடக் கழிவு எரிக்கப்படாமல் தடுக்கப்பட்டது. ஒரு நாளைக்கு 30 டன் என்ற விதத்தில் மாதத்துக்கு சுமார் 900 டன் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன.

கழிவுகளின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், திடக் கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிகத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் 77 பேரூராட்சிகளில் நீலகிரியில் கோத்தகிரி பேரூராட்சியும் ஒன்று. இங்கு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை தனித்தனியாக சேகரிக்கப்படுகின்றது. இதிலும் அட்டை, டயர், செருப்பு ஆகியவை தனித்தனியாக பிரிக்கப்படுகிறது. மக்கும் குப்பைகள் உரமாக உற்பத்தி செய்யப்படுகிறது. பல்வேறு கட்டங்களாக 180 நாட்களுக்குப் பின்னர், இயற்கை உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு கிலோ உரம் ரூ.2-க்கு விற்கப்படுகிறது. பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நேரு பூங்காவின் தேவையை பூர்த்திசெய்கிறது.

விரைவில் உரம்

இயற்கை உரம் தயாரிக்க நீண்ட காலமாவதால், தற்போது எருமை மற்றும் மாடுகளை வாங்க பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கிடைக்கும் சாணம் மற்றும் கோமியம் மூலம் உரம் விரைவில் தயாராகும். தற்போது மாதம் 750 கிலோ உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கால்நடைகள் வாங்கப்பட்ட பின்னர் இந்த அளவு உயரம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மக்கும் குப்பைகள் உரமாக மாற்றப்படும் நிலையில், பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கம் பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு மறு சுழற்சி திட்டம் ஓரளவிற்கு தீர்வாகி வருகிறது. நீலகிரியில் கேத்தி மற்றும் கோத்தகிரி பேரூராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட பிரகாசபுரத்தில் ரூ.3.50 லட்சம் செலவில் மறுசுழற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை சுத்தப்படுத்தும் கருவி, சுத்தப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்கை உருக்கும் கருவி மற்றும் உருக்கிய பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை சிறிய துண்டாக்கும் கருவி என மூன்று கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. துண்டாகும் பிளாஸ்டிக் கழிவுகள், சாலைகள் அமைக்க பயன்படுத்தப்படுகின்றன.

பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் கூறும்போது, பிளாஸ்டிக் சாலை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்பேரில், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகள் அமைக்கும்போது, தாருடன் 10-ல் ஒரு பங்கு பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிலோ மீட்டர் சாலையில் சுமார் 750 கிலோ பிளாஸ்டிக் பயன்படுகிறது. பிளாஸ்டிக் கலப்பதால் சாலையின் ஸ்திரத்தன்மை நீடிப்பதுடன், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குவது குறைகிறது என்றார்.

இத்திட்டம் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய நகராட்சிகளுக்கும் விரிவாக்கினால், நகராட்சிகளில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகள் நீங்கும், மக்கள் இத்திட்டங்களை முறையாக பயன்படுத்தினால் நம் நகரங்கள் ‘சுத்தமாகும்’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x