Published : 20 Jan 2015 09:48 AM
Last Updated : 20 Jan 2015 09:48 AM

சென்னை ஐஐடி வளாகத்தில் உரிய அனுமதி பெற்று மரங்களை வெட்ட வேண்டும்: பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை ஐஐடி வளாகத்தில் மேம்பாட்டுப் பணிகளுக்காக மரங்களை வெட்டவேண்டிய நிலை ஏற்பட்டால், உரிய அனுமதி பெற வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வு உத்தரவிட்டது.

இந்திய உயிரியல் கணக் கெடுப்புப் பிரிவில் வன விலங்கு புகைப்படக்காரராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் இ. சேஷன். இவர், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வில் 2014, பிப்ரவரியில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு விவரம்:

8 ஆயிரம் மரங்கள்

சென்னை ஐஐடி வளாகத்தில் 2000-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் இருந்த 8 ஆயிரம் மரங்கள் உரிய அனுமதி இன்றி வெட்டப்பட்டன. மேலும், இந்த நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் கட்டிடங்கள் கட்டுவதற்காக சுமார் 10 ஆயிரம் மரங்கள் வெட்டப்பட உள்ளன. ஆனால், மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006-ன்படி இதற்கு அனுமதி பெறவில்லை.

ஐஐடி வளாகத்தில் நடத்தப் படும் விழாக்களின்போது ஆயிரக் கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த வாகனங்கள் மோதி இதுவரை 2 மான்கள் காயமடைந்துள்ளன. அதிக அளவில் மக்காத குப்பைகளும் வீசப்படுகின்றன. இந்த விழாக்களில் பயன்படுத்தும் ஒலிப்பெருக்கிகளால் ஒலி மாசு ஏற்படுகிறது. இவை எல்லாம் அங்கு வசிக்கும் வன விலங்குகளை பாதிக்கின்றன.

எனவே, ஐஐடி வளாகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக, கட்டிடங்கள் கட்டு வதையும், மரங்கள் வெட்டப் படுவதையும் தடுக்க வேண்டும். அங்கு நடத்தப்படும் நிகழ்ச்சிகளை முறைப்படுத்த வேண்டும் என்றும் சேஷன் தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த நிலையில், இந்த மனு தொடர்பாக அமர்வின் நீதித் துறை உறுப்பினர் நீதிபதி எம். சொக்கலிங்கம், தொழில்நுட்ப உறுப்பினர் பேராசிரியர் ஆர். நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று இறுதி விசாரணை நடைபெற்றது. மனுதாரர் இ. சேஷன் சார்பில் வழக்கறிஞர் எம். சந்தானராமன் வாதாடினார்.

அதைத் தொடர்ந்து, ‘ஐஐடி நிர்வாகம் உரிய அனுமதியின்றி மரங்களை வெட்டக் கூடாது’ என்று பசுமைத் தீர்ப்பாய அமர்வு உத்தரவிட்டது.

வழக்கு முடித்து வைப்பு

மேலும், டிசம்பர் 2014-ம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையில் கல்வி நிறுவனங்கள் கட்டிடங்கள் கட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அனுமதி பெறத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளது. அதனால், ஐஐடி வளாகத்தில் கட்டிடங்கள் கட்ட தடை விதிக்க முடியாது. அங்கு நடைபெறும் விழாக்களை முறைப்படுத்துவது, இந்த அமர்வின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என்று கூறி தீர்ப்பாய உறுப்பினர்கள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x