Published : 15 Apr 2014 03:26 PM
Last Updated : 15 Apr 2014 03:26 PM
தமிழகத்தின் கிழக்கு கடற்கரைக் பகுதிகளில் மீன்பிடித் தடைக்காலம் துவங்கியதால், மீனவர்கள் இன்று தொடங்கி மே 29 வரை 45 நாட்கள் கடலுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம் உள்ளிட்ட கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல், மே மாதங்களை மீன் உள்ளிட்ட கடல் உயிரிகளின் இனப்பெருக்க காலமாக, மத்திய வேளாண் அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
இதன்படி, தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் இந்த ஆண்டுக்கான 45 நாள் மீன்பிடித் தடைக்காலம் வரும் ஏப்ரல் 15லிருந்து அமலுக்கு வந்துள்ளது. மேலும் மே 29 வரை இந்த தடை அமலில் இருக்கும்.
இந்த மீன்பிடித் தடைக்காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகளைப் பயன்படுத்தி கடலுக்குச் சென்று மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகம் முழுவதும், 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்கு செல்லாமல் கடற்கரையில் ஆழங்குறைந்த பகுதிகளில் ஓய்வெடுக்கும். ராமேஸ்வரம் மற்றும் பாம்பனில் 900க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் மீ்ன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மீனவப் பிரதிநிதி கருணாமூர்த்தி கூறும்போது, "இந்த மீன்பிடித் தடைக்காலத்தில் அரசு 45 தினங்களுக்கு 1,800 ரூபாய் நிவாரண நிதியாக வழங்குகின்றது. மேலும் இந்த தொகையையும் தடைக்காலம் முடிந்த பின்னரே தாமதமாக வழங்கப்படுகிறது. நிவாரணத் தொகையை தினம் ரூ.100 விதம் ரூ.4,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
கேரளா மற்றும் ஆந்திராவில் மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றது. அதுபோல தமிழக மீனவர்களுக்கும் இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும்.
மேலும் இந்த மீன்பிடித் தடைக்காலத்தை பயன்படுத்தி கொழும்பில் நடைபெற வேண்டிய 2ம் கட்ட மீனவப் பேச்சுவார்த்தையை துரிதப்படுத்த வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT