Published : 12 Jan 2015 01:39 PM
Last Updated : 12 Jan 2015 01:39 PM
ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று நம்மாழ்வார் மோட்சம் பெறும் நிகழ்வு நடைபெற்றது. இதைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின், ராப்பத்து கடைசிநாளில் பரமபத வாசலுக்கு செல்லும் வழியில் நம்மாழ்வார் முக்தன் வேடத் தில் இருப்பார். கிரீடம் முதலான திருவாபரணங்கள் இல்லாமல் பட்டு பீதாம்பரம் இல்லாமல் வெள்ளை ஆடை உடுத்தி, பன்னிருநாமமும், துளசி மாலையும் தரித்து காட்சி யளிப்பார்.
நம்பெருமாள் வழக்கம்போல மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வந்து சந்திரபுஷ்கரணியில் தீர்த்த வாரி கண்டருளிய பின்னர், திருமாமணி மண்டபம் வந்து சேர்ந்து திருவந்திக்காப்பு நடை பெறும். அர்ச்சகர்கள் நம்மாழ் வாரை கையில் ஏந்தி வந்து நம்பெருமாளின் திருவடியில் நம்மாழ்வார் நெற்றிபடும்படி சமர்ப்பித்து, துளசியால் ஆழ்வா ரை மூடுவர். நம்மாழ்வார், நம்பெருமாளுடன் கலந்து மோட் சத்தை அடையும் நிகழ்ச்சியாக நடத்தி காட்டப்படுவதே நம்மாழ் வார் மோட்சமாகும்.
இந்தாண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழாவின் கடைசி நாளான நேற்று காலை 6 மணிக்கு நடைபெற்ற இந்த நம்மாழ்வார் மோட்சம் பெறும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பின்னர் நம்பெருமாள் காலை 9.30 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை இயற்பா பிரபந்தம் நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாளின் திருவடிபணிந்து மோட்சம் பெறும் நம்மாழ்வார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT