Published : 14 Jan 2015 10:02 AM Last Updated : 14 Jan 2015 10:02 AM
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரும் சீராய்வு மனுவை விசாரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றப் பதிவாளரிடம் தமிழக அரசு சார்பில் கடிதம்
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரும் தமிழக அரசின் சீராய்வு மனுவை வெளிப்படையான விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றப் பதிவாளரிடம் அவசர கடிதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகளை நடத்துவதற்கு தடை விதித்து கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தியப் பிராணிகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசின் சார்பிலும் தமிழக ஜல்லிக்கட்டு பேரவை சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான தடையை விலக்கத் தமிழக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழக கால்நடைப் பராமரிப்புத் துறைச் செயலர் விஜயகுமார், துறை இயக்குநர் ஆபிரஹாம், உதவி இயக்குநர் அயூப்கான் ஆகியோர் அடங்கிய குழுவினர் டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக முகாமிட்டுள்ளனர். அவர்கள் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு, ஜல்லிக்கட்டை நடத்துவதற்காக மிருக வதைத் தடுப்புச் சட்டத்தில் சில அவசரத் திருத்தங்கள் கொண்டுவர வலியுறுத்தியுள்ளனர்.
அதேநேரம் தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் கடிதம் ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக கால்நடைத் துறை சார்பில் அரசு வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா இந்த கடிதத்தைத் தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பாரம்பரிய கலாச்சார ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த தமிழக மக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. எனவே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சீராய்வு மனுவை வெளிப்படையான விசாரணைக்கு உடனடியாக எடுத்துக்கொண்டு தமிழக அரசின் கருத்தைக் கேட்க வேண்டும் என்று கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
மிருகங்களை வணிகக் காட்சிப் பொருளாக்கக் கூடாது என்ற சட்டப் பிரிவுதான் ஜல்லிக்கட்டுக்கு தடையாக உள்ளது. இதை மிருக வதைத் தடுப்புச் சட்டத்தில் இருந்து நீக்கக் கோரி தமிழக அரசு தரப்பில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
WRITE A COMMENT