Published : 19 Jan 2015 09:47 AM
Last Updated : 19 Jan 2015 09:47 AM
அரசின் மானியத்தை வாடிக்கையாளர் நேரடியாக பெறும் திட்டத்தில் சேர வாடிக்கையாளர்களே வங்கியில் படிவத்தை வழங்க வேண்டும் என்று காஸ் ஏஜென்சிகள் நிர்ப்பந்திப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
காஸ் மானியத்தை ரொக்கமாக பெறும் திட்டத்தில் சேர ஆதார் எண் வைத்திருப்போர், ஆதார் எண் இல்லாதோர் என வகை பிரித்து காஸ் ஏஜென்சிகள் படிவங்களை வழங்கி வந்தன. பொதுமக்களிடையே நிலவிய குழப்பங்களை தீர்க்கும் விதமாக ஒரே படிவத்தை வழங்கலாம் என்று காஸ் நிறுவனங்கள் அறிவித்தன. தொடக்கத்தில் இந்த படிவங்களை பூர்த்தி செய்து வங்கியிலும், காஸ் ஏஜென்சிகளிடமும் வழங்க வேண்டியிருந்தது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்தை குறைக்கும் வகையில், காஸ் ஏஜென்சிகளில் மட்டும் படிவத்தை வழங்கினால் போதும், வங்கிக்கு நாங்கள் அனுப்பிவிடுகிறோம் என்று காஸ் நிறுவனங்கள் அறிவித்தன. இண்டேன் நிறுவனம் ஒரு படி கீழே இறங்கி வந்து, காஸ் சிலிண்டர் விநியோகிக்க வரும் சிலிண்டர் டெலிவரி பாய் மூலமாக படிவங்களை வழங்குவதாகவும், அவர்களே விண்ணப்பங்களை பெற்றுக்கொள்வார்கள் என்றும் அறிவித்தது.
இந்நிலையில் சில காஸ் ஏஜென்சிகள், வங்கிகளில் விண்ணப்பிப்பதற்கான படிவத்தை வாடிக்கையாளரே வங்கிகளுக்குச் சென்று வழங்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்து வருகிறது. இதனால் வங்கிகளுக்கும் வாடிக்கையாளர் மீண்டும் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வியாசர்பாடி- எம்கேபி நகரைச் சேர்ந்த ஒரு காஸ் வாடிக்கையாளர் கூறியதாவது: எம்கேபி நகரில் உள்ள இண்டேன் காஸ் ஏஜென்சி ஒன்று, வங்கிகளில் வழங்குவதற்கான தனி படிவத்தை வாடிக்கையாளர்களே வங்கியில் வழங்க வேண்டும். நாங்கள் வங்கிக்கு அனுப்பும் பணியை செய்ய மாட்டோம் என்று கூறி வருகிறது. இதனால் நாங்கள் மீண்டும் வங்கி வாசலில் காத்துக்கிடக்க வேண்டியதுதான் என்றார் அவர்.
இண்டேன் நிறுவன அதிகாரி ஒருவரிடம் இதுகுறித்து கேட்டபோது, “நாங்களே படிவங்களை வங்கிகளுக்கு அனுப்பி வந்தோம். பல வங்கிகளில் அன்றாட பணிகளுக்கு மத்தியில் இந்த படிவங்களுக்காக குறைவான நேரத்தை அலுவலர்கள் செலவிடுகின்றனர். அதனால் காஸ் மானிய திட்டத்துக்கு பலர் விண்ணப்பித்து நீண்ட நாட்கள் ஆகியும், 17 இலக்க காஸ் அடையாள எண், வங்கிக் கணக்குடன் சேர்க்கப்படாததால், இன்னும் அத்திட்டத்தில் சேர முடியவில்லை. இந்நிலையில் வாடிக்கையாளர் கேட்கும் கேள்விகளுக்கு எங்களால் பதில் அளிக்க முடியவில்லை. எனவே படிவத்தை வங்கியில் வழங்கும் பொறுப்பை அவர்களிடமே காஸ் ஏஜென்சிகள் விட்டுவிடுகின்றன. இந்த விவகாரத்தில் வங்கிகளின் ஒத்துழைப்பு குறைவாக உள்ளது” என்றார் அவர்.
இது குறித்து சென்னை மாவட்ட முன்னோடி வங்கி திட்ட அதிகாரி அருண்குமாரிடம் கேட்டபோது, “காஸ் மானியத்தை நேரடியாக பெறும் திட்டத்துக்கான படிவத்தை வங்கிகள் பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் 044- 25323252 என்ற எங்களது தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT