Published : 05 Jan 2015 11:51 AM
Last Updated : 05 Jan 2015 11:51 AM

இடதுசாரிகளுடன் இணைந்து செயல்பட மாநில கட்சிகளுக்கு நிர்பந்தம் ஏற்படும்: முன்னாள் எம்.பி. சுப்பராயன் பேச்சு

இடதுசாரிகளுடன் இணைய வேண்டிய நிர்பந்தம் மாநில கட்சி களுக்கு ஏற்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி னருமான கே.சுப்பராயன் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்ட மாநாடு, சென்னை தி.நகரில் உள்ள மாநில தலைமையகமான பாலன் இல்லத்தில் நேற்று நடந்தது. மாநாட்டை தொடங்கி வைத்து கே.சுப்பராயன் பேசியதாவது:

தொழிலாளர் வர்க்கத்துக்காக பல தியாகங்களை செய்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. எனினும் கடந்த தேர்தலில் தொழி லாளர்களே இடதுசாரிகளை கைவிட்டுவிட்டனர். இது ஆழமாக அலச வேண்டிய விஷயம். இதனால், கம்யூனிஸ்ட்கள் தடுமாற்றம் அடையவில்லை. இது தற்காலிகமான பின்னடைவுதான். சாதி, மத, இன வெறியைத் தூண்டி தொழிலாளர் வர்க்கத்தை பிரித்து சிலர் அரசியல் ஆதாயம் தேடுகின்றனர்.

புதிய பொருளாதார கொள்கைக்கு மாற்றான பொருளா தார கொள்கையை கொண்ட இடது சாரி ஜனநாயகத்தை மக்கள் முன் வைக்கிறோம். தேர்தல் நோக்கு டன் அல்லாமல் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட, மக்களின் தேவைகளை கருத்தில் கொண்ட இந்த மாற்று தளத்தில் மாநில கட்சிகளும் இடதுசாரிகளுடன் இணைந்து செயல்பட வேண்டிய நிர்பந்தத்தை தற்போதைய அரசியல் சூழல் ஏற்படுத்தும்.

தமிழக அரசு செயலற்று இருப்பதால், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. மக்கள் பாதுகாப்பற்ற நிலையிலும் குற்ற வாளிகள் பாதுகாப்பாகவும் வாழும் சூழல் ஜனநாயகத்தின் மோசமான அம்சமாகும். புதுச்சேரியில் நடக்கவிருக்கும் கட்சியின் அகில இந்திய மாநாடு, அடுத்த 3 ஆண்டுகளுக்கு கட்சி என்ன அரசியல் உத்திகளை பயன்படுத்த வேண்டும் என்று விவாதித்து இறுதிப்படுத்தி வழிகாட்டும்.

இவ்வாறு சுப்பராயன் பேசினார்.

சோழிங்கநல்லூர் தொகுதியில் புதிதாக அரசு பொது மருத்துவமனை அமைக்க வேண்டும், கோயில் மனைகளில் குடியிருப்போருக்கு விதிக்கப்பட்ட வாடகை உயர்வை ரத்து செய்ய வேண்டும், கண்ணகி நகரிலிருந்து சென்னையின் அனைத்து இடங்களுக்கும் பஸ்கள் இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டன.

மாநில நிர்வாகக் குழு உறுப் பினர்கள் ஏ.சேக்கிழார், ஆர்.சுசீலா மற்றும் மாநிலக் குழு உறுப்பினர் மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x