Last Updated : 17 Jan, 2015 10:21 AM

 

Published : 17 Jan 2015 10:21 AM
Last Updated : 17 Jan 2015 10:21 AM

முதல்வர் காப்பீடு அட்டை இல்லாதவர்கள் அறுவை சிகிச்சை பெறுவதில் சிக்கல்: அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் பாதிப்பு

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை இல்லாதவர்கள், அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்துகொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் ஏழை, எளிய மக்கள் தரமான மருத்துவ சிகிச்சை மற்றும் அதிநவீன மருத்துவ வசதிகளைப் பெற தமிழக அரசு சார்பில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.

ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம் மற்றும் அதற்கு குறைவாக உள்ள குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத் தப்படுகிறது. ஒவ்வொரு குடும்பத் துக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வீதம், 4 ஆண்டுகளுக்கு ரூ.4 லட்சம் வரை சிகிச்சைக்காக வழங்கப்படுகிறது. பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் சிகிச்சை அளிக்க சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் என 750-க்கும் மேற்பட்ட மருத்துவமனை களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள் ளது.

ஜி.ஹெச்.களுக்கும் வருமானம்

தனியார் மருத்துவமனைகளில் இத்திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சிகிச்சைக்கான காப்பீட்டுப் பணத்தை சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்குகிறது. அதேபோல, காப்பீட்டுத் திட்டத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப் பதால், அரசு மருத்துவமனைகளும் வருவாய் ஈட்டுகின்றன. அதனால் அரசு மருத்துவமனைகளில் காப்பீட்டு திட்டம் மூலமாகவே பெரும்பாலான அறுவை சிகிச்சைகள் செய்யப் படுகின்றன.

தாமதமாகும் சிகிச்சை

காப்பீட்டுத் திட்டம் மூலம் வருவாய் கிடைப்பதால், அரசு மருத்துவமனைகளில் காப்பீட்டு அட்டை இருந்தால் மட்டுமே உடனடி யாக சிகிச்சை பெற முடியும் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. காப்பீட்டு அட்டை இல்லாத நோயாளிகளுக்கு மிகவும் தாமதமாக அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. காப்பீட்டு அட்டை இருந்தால்தான் அறுவை சிகிச்சை என்ற கண்டிப்பான நடைமுறை சில அரசு மருத்துவமனைகளில் பின்பற்றப்படுகின்றன.

உடனடியாகச் சென்று காப்பீட்டு அட்டையை வாங்கிவருமாறு நோயாளிகளிடம் டாக்டர்கள் வெளிப்படையாகவே கூறுகின்றனர் என்ற புகாரும் உள்ளது. இதனால், காப்பீட்டு அட்டை இல்லாத நோயாளிகள் அரசு மருத்துவ மனைகளில் உயிர் காக்கும் அறுவை சிகிச்சை, சாதாரண அறுவை சிகிச்சைகள் செய்துகொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இலவச சிகிச்சை என்பது மாறி, காப்பீட்டு பணத்தின் அடிப்படையில்தான் சிகிச்சை என்ற நிலை அரசு மருத்துவமனைகளில் உருவாகியுள்ளது.

அதிகாரிகள் விளக்கம்

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘காப்பீட்டு அட்டை வைத்திருப்பவர்கள், இல்லா தவர்கள் என அனைவருக்கும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கிறோம். காப்பீட்டு அட்டை இருந்தால் அறுவை சிகிச்சையின் போது உள்ளே பொருத்துவதற்குத் தேவையான கருவிகளை காப்பீட்டுப் பணம் மூலம் உடனே வாங்கிவிடலாம். காப்பீட்டு அட்டை இல்லை என்றால், டெண்டர் விட்டு கருவிகள் வாங்க தாமதம் ஏற்படுகிறது. அதனால்தான் காப்பீட்டு அட்டை இல்லாத நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சற்று தாமதம் ஏற்படுகிறது’’ என்றனர்.

மருத்துவர்களுக்கு ஊக்கத் தொகை

அரசு மருத்துவமனைகளுக்கு கிடைக்கும் காப்பீட்டு பணத்தில் 45 சதவீத தொகை, நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை, அறுவை சிகிச்சைக்கு தேவையான கருவிகள் வாங்கப் பயன்படுத்தப்படுகிறது. சிறுநீரகம், கல்லீரல், இதயம் போன்ற இதர மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு 20 சதவீத தொகை கொடுக்கப்படுகிறது.

மருத்துவமனையை மேம்படுத்த, மருத்துவக் கருவிகள் வாங்க 20 சதவீத தொகை வழங்கப்படுகிறது. எஞ்சிய 15 சதவீத தொகை, காப்பீட்டுத் திட்டத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், நர்ஸ்கள், டெக்னீஷியன்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பிரித்து ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x