Published : 14 Jan 2015 11:35 AM Last Updated : 14 Jan 2015 11:35 AM
ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் காணாமல்போன வன உயிரின விளக்க மையம்
ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் மக்களுக்கு சூழல் சார்ந்த விழிப்புணர்வு விளக்க மையம், மிக மோசமான நிலையில் உள்ளது. அதை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் பல வகைகளில் பயனளிக்கும் வாய்ப்புள்ளது.
பொள்ளாச்சியை ஒட்டியுள்ள ஆனைமலை மலைத்தொடரில் உள்ள அரிய வனச் சூழலின் அடைப்படையில் 1976-ல் இந்திரா காந்தி தேசிய பூங்கா உருவானது. பல கட்ட வளர்ச்சிக்குப் பிறகு புலிகளைக் காக்கும் திட்டத்தின்கீழ் 2005-ல் இணைக்கப்பட்டு, 2008-ல் ஆனைமலை புலிகள் காப்பகமாகவும் மாறியது. அரிய தாவரங்கள், விலங்கினங்கள், பறவைகள் அடர்ந்த வனப்பகுதிகள் கொண்ட இந்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளும், இயற்கை ஆர்வலர்களும் ஏராளம்.
தேசிய பூங்காவாக இருந்த சமயத்தில் சாதாரண மக்களையும், சூழல் ஆர்வலர்களாக மாற்றும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதில் தேசிய பூங்காவின் வன உயிரின விளக்க மையமும் ஒன்று. சுற்றுச்சூழல் கல்வி மையம் என்ற அமைப்பின் மூலம் இந்திராகாந்தி தேசியப் பூங்கா வன உயிரின விளக்க மையம், ஆழியாறில் அமைக்கப்பட்டது.
ஆனைமலை மலைத்தொடரின் நுழைவுப்பகுதியான ஆழியாறில் இந்த மையம் அமைக்கப்பட்டது சுற்றுலாப் பயணிகளுக்கும், பொது மக்களுக்கும் மிகவும் பயனளித்தது. வனத்தை பாதுகாப்பது, வனம் குறித்த சூழல்களை மக்களுக்கு விளக்குவது, அதனுடன் இணைந்த பொழுதுபோக்கு, சுற்றுச்சூழல் கல்வி என பல தரப்பட்ட அம்சங்கள் கொண்டதாக இந்த மையம் அமைக்கப்பட்டது.
ஆனால், ஆனைமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு இந்த மையத்தின் செயல் பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தப்பட்டன. சீரிய நோக்கங் களுடன் தொடங்கப்பட்ட இந்த மையம், இன்று இருக்கும் இடம் தெரியாமல் சிதைந்து கிடக்கி றது. சில அறிவிப்புப் பலகைகள் மட்டும் இன்றும் அதன் நினைவுச்சின்னங்களாக இருக்கின்றன.
பொழுதுபோக்கும், கல்வியும்
வனம் சார்ந்த பொழுதுபோக்கு, கல்வி ஆகியவற்றை இந்த மையம் செய்து வந்ததாக வனத்துறையினர் கூறுகின்றனர். அதாவது ஆழியாறு அணையை ஒட்டி அமைக்கப்பட்ட இந்த மைய வளாகத்தில் பொதுமக்கள் இளைப்பாற தனி இடம், குழந்தைகள் விளையாடி மகிழ பூங்கா, அணை, குன்றுகளை கண்டுகளிக்க உயர் மட்ட கோபுரம், வன விலங்குகளைப் பற்றியும், தேசிய பூங்காவைப் பற்றியும் தெரிந்துகொள்ள பயிற்சி மையம் உள்ளிட்டவை இங்கு செயல்பட்டு வந்தன. வெற்றிகரமாக இயங்கிய ஒரு வரலாறு, இந்த மையத்துக்கு உண்டு.
2004-ம் ஆண்டில் இந்த மையம் புதுப்பிக்கப்பட்ட போது, பயணிகள் விட்டுச் செல்லும் குப்பைகளை தரம் பிரித்து உரமாக்கவும், கூடுதலாக உயர் மட்ட கோபுரங்களை அமைக்கவும், மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையுடன் சுற்றுச் சூழல் கல்வி மையம் இணைந்து கூடுதலாக பல வசதிகளை கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. மலைவாழ் மக்கள் வேலைவாய்ப்பு, பல்லுயிர் பெருக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதன் முக்கியப் பணிகளாக கூறப்பட்டன.
ஆனால் அறிவிப்புகளும், திட்டங்களும் நிறுத்தப்பட்டன. நல்ல நிலையில் இருந்த வன உயிரின விளக்க மையம் கடந்த சில ஆண்டுகளாக பயன்பாடு குறைந்து நாளடைவில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது. அதன் விளைவாக மையம் செயல்பட்ட அடையாளமே தெரியாத வகையில் புதர் மண்டி கிடக்கிறது. மீண்டும் இந்த மையத்துக்கு புத்துணர்வளித்து வனத்துறை செயல்படுத்துமானால், ஆனைமலை புலிகள் காப்பகம் குறித்த தகவல்களையும், விழிப்புணர்வையும் மக்களிடையே எளிதில் கொண்டு செல்ல முடியும் என்றனர் வனத்துறையினர்.
அட்டகட்டியில் உள்ள பயிற்சி மையத்துடன், இந்த விளக்க மையமும் இணைந்து செயல்படு மானால் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு வரும் பலருக்கும் பயன் அளிக்க வாய்ப்புள்ளது. ஆழியாறு அணை, படகு இல்லம், குரங்கு அருவி, அதனுடன் இணைந்து இந்த மையமும் செயல் பட்டால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கும்.
இதுகுறித்து பொள்ளாச்சி வனச்சரகர் ரவிச்சந்திரன் கூறும்போது, மையத்தை சீரமைக்க ஆலோசித்து வருகிறோம். விரைவில் அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றார். புதர் மண்டிக்கிடக்கும் வன உயிரின விளக்க மையம்
சீரிய நோக்கங்களுடன் தொடங்கப்பட்ட இந்த மையம், இன்று இருக்கும் இடம் தெரியாமல் சிதைந்து கிடக்கிறது. சில அறிவிப்புப் பலகைகள் மட்டும் நினைவுச்சின்னங்களாக இருக்கின்றன.
WRITE A COMMENT