Published : 29 Apr 2014 10:04 AM
Last Updated : 29 Apr 2014 10:04 AM
சென்னை மாநகரில் ஒரு சில கோயில் குளங்களில் மட்டும் கோடை காலத்திலும் தண்ணீர் இருக்கிறது. பெரும்பாலான கோயில் குளங்கள் வறண்டு கிடக்கின்றன.
நீர் ஆதாரங்களை மேம்படுத் தினால் குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வருவதுடன் நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்த முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
பொதுவாக கோயில் அருகில் குளம் வெட்டி வைப்பது வழக்க மான ஒன்று. குளத்தில் தேங்கும் நீரால், அந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் வைத்துக் கொள்ளலாம் என்பதே அதற்கு காரணம். அருகில் உள்ள ஆறு அல்லது கால்வாயில் இருந்து குளத் துக்கு நீர் வருவதற்காக வரத்துக் கால்வாயும் அமைக்கப்பட்டது.
நாளடைவில் மக்கள்தொகை பெருக்கம் காரணமாக, கோயில் குளங்களும் அவற்றுக்கான நீர்வழித் தடங்களும் ஆக்கிரமிக் கப்பட்டு வீடுகள், கடைகள், தொழிற் சாலைகள் கட்டப்பட்டன. இதனால் கோயில் குளங்கள் நீர்வரத்து இல்லாமல் வறண்டுபோயின.
தற்போது பல கோயில் குளங் கள் குப்பைத் தொட்டியாவும் விளை யாட்டு மைதானமாகவும் மாறி யுள்ளன. இதன்விளைவாக, நிலத் தடி நீர்மட்டமும் அதலபாதாளத் துக்குப் போனது. அதிக ஆழத்தில் ஆழ்துளை கிணறுகள் தோண்டப் படுவதால் கடலோரப் பகுதிகளில் கடல்நீர் உட்புகுந்துவிட்டது.
சென்னையைப் பொருத்தவரை மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி உள்ளிட்ட சில கோயில் குளங்களில் மட்டும் கடும் கோடையிலும் தண்ணீர் இருக்கிறது. ஆண்டு முழுவதும் இவற்றில் தண்ணீர் இருப்பது வியப்பு. அதேநேரத்தில் பல குளங்கள் ஒருசொட்டு தண்ணீர்கூட இல்லாமல் வறண்டு கிடக்கின்றன.
இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரிய முன்னாள் பொறியியல் இயக்குநர் எஸ்.சுந்தரமூர்த்தி கூறியதாவது:
மயிலாப்பூர் கோயில் குளத் துக்கு தண்ணீர் வரும் பாதை முழு மையாக அடைக்கப்பட்டுவிட்ட தால், 15 ஆண்டுகளுக்கு முன்பு அதுவும் நீரின்றி வறண்டு போகும் நிலை ஏற்பட்டது. மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் குளம் வறண்டுபோகாமல் பாதுகாக்க வேண்டும் என்று சென்னை மாநக ராட்சியும், சென்னைக் குடிநீர் வாரியமும் எண்ணியது. அது குறித்து அந்தப் பகுதி மக்களிடம் எடுத்துக் கூறியதும் அவர்களும் முழு ஒத்துழைப்புக் கொடுத்தனர்.
முதலில் மழைநீர் கால்வாயில், கழிவுநீர் கலப்பது முற்றிலுமாக தடுக்கப்பட்டது. பின்னர், குளத் தைச் சுற்றியுள்ள 5 தெருக்களில் இருந்து மழைநீர் குளத்துக்கு நேரடியாக வரும் வகையில் நீர் ஆதாரங்கள் மேம்படுத்தப்பட்டன. அப்போதிருந்து மயிலாப்பூர் கோயில் குளத்தில் எப்போதும் தண்ணீர் இருந்துகொண்ட இருக் கிறது. சென்னையில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் குளங்களின் நீர்ஆதாரத்தையும் மேம்படுத்தினால் நீர்வரத்து நிரந்தரமாக இருக்கும். அப்பகுதி களில் நிலத்தடி நீர்மட்டமும் படிப்படியாக உயரும்.
இவ்வாறு சுந்தரமூர்த்தி கூறினார்.
சென்னைக் குடிநீர் வாரிய முன்னாள் நில நீர் ஆய்வாளர் ஏ.ஜெயபாலன் கூறுகையில், ‘‘சென்னையில் மழைநீர் முழுவதும் வீணாக கடலில் கலக்கிறது. மழைநீரை, நகரில் வறண்டு கிடக்கும் குளங்களுக்குச் செல்ல வழிவகை செய்தால் சுமார் ஒன்றரை கி.மீ. தூரத்துக்கு நிலத்தடி நீர்மட்டம் உயரும். அதனால் கோடை காலத்தில்கூட தண்ணீர் தட்டுப்பாடு வராமல் சமாளிக்க முடியும்.
இதற்காக சென்னை மாநகராட்சியும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமமும் இணைந்து விரிவான சர்வே நடத்தி, தொலைநோக்குப் பார்வையில் திட்டம் வகுக்க வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT