Published : 07 Jan 2015 06:45 PM
Last Updated : 07 Jan 2015 06:45 PM
கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ. 4,000 ஆக உயர்த்தி வழங்குவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், '' தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகளால் கொள்முதல் செய்யப்படும் ஒரு டன் கரும்புக்கு ரூ.2650 விலை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், பொதுத்துறை மற்றும் கூட்டுறவுத் துறை சர்க்கரை ஆலைகள் மட்டுமே இந்த விலையை விவசாயிகளுக்கு வழங்கின. தனியார் சர்க்கரை ஆலைகளில் ஒன்று கூட இந்த விலையை வழங்கவில்லை.
வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு
அதுமட்டுமின்றி, அதற்கு முந்தைய ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.100 குறைத்து ரூ.2250 மட்டுமே வழங்கின. மீதமுள்ள 400 ரூபாயை வழங்க முடியாது என்று சர்க்கரை ஆலைகள் மறுத்து வருகின்றன. இந்த நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 6 மாதங்களாக உழவர்கள் போராடி வருகின்றனர். ஒரு டன் கரும்புக்கு ரூ.3,500 வழங்க வேண்டும் என உழவர்கள் கோரிய நிலையில், அரசு நிர்ணயித்த விலை மிகவும் குறைவு. ஆனால், அந்த விலையைக் கூட வழங்க தனியார் ஆலைகள் மறுத்து விட்ட நிலையில், அதை அரசுக்கு விடப்பட்ட சவாலாக கருதி, ஆலை அதிபர்களை எச்சரித்து கரும்புக்கு உரிய விலை கிடைப்பதை ஆட்சியாளர்கள் உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசோ இதை செய்யாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
கர்நாடக அரசு கண்ட தீர்வு
அண்டை மாநிலமான கர்நாடகத்தில் இதே போன்ற சூழல் ஏற்பட்ட நிலையில், அதற்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமய்யா அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தீர்வு கண்டிருக்கிறார். கர்நாடகத்தில் கரும்புக் கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.2,500 என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அங்குள்ள தனியார் சர்க்கரை ஆலைகள் ரூ.2,100 மட்டுமே வழங்கின. மீதமுள்ள தொகையையும் வழங்க வேண்டும் என்று உழவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த சனிக்கிழமையன்று சர்க்கரை ஆலை உரிமையாளர்களை முதலமைச்சர் சித்தராமய்யா அழைத்துப் பேசினார்.
அப்போது வரும் 20 ஆம் தேதிக்குள் கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.100 வீதம் சர்க்கரை ஆலைகள் நிலுவைத் தொகை வழங்க வேண்டும்; அத்துடன் கர்நாடக அரசு அதன் பங்காக ரூ.100 சேர்த்து வழங்கும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகையில் பாதி உடனடியாக கிடைத்து விடும். அதன்பின் மீதமுள்ள ரூ.200 நிலுவைத் தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
இதன்மூலம், கர்நாடகத்தில் கரும்பு விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது. இதேமுறையில் தமிழ்நாட்டிலும் கரும்பு விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசின் தாமதம்
இன்னொருபுறம் தமிழகத்தில் நடப்பாண்டிற்கான கரும்பு கொள்முதல் விலை இன்னும் அறிவிக்கப்பட வில்லை. நடப்பாண்டில் ஒரு டன் கரும்புக்கு ரூ.2,200 வழங்க வேண்டுமென கடந்த பிப்ரவரி மாதமே மத்திய அரசு அறிவித்து விட்டது. அதன்பின் 11 மாதங்களாகிவிட்ட நிலையில், மத்திய அரசு அறிவித்த விலையுடன் மாநில அரசு பரிந்துரை விலையை சேர்த்து அறிவிக்க தமிழக அரசு தாமதிப்பது ஏன்? எனத் தெரியவில்லை. அடுத்த ஆண்டிற்கான (2015 - 16) கரும்பு கொள்முதல் விலையை அடுத்த சில நாட்களில் மத்திய அரசு அறிவிக்கவிருக்கும் நிலையில், நடப்பாண்டிற்கான விலையை அறிவிக்காமல் தமிழக அரசு தாமதம் செய்வது சரியல்ல. எனவே, உழவர்கள் கோரிக்கையை ஏற்று கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ. 4,000 ஆக உயர்த்தி வழங்குவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் '' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT