Published : 20 Jan 2015 08:29 AM
Last Updated : 20 Jan 2015 08:29 AM
அகில இந்திய அளவில் ஆண்டு தோறும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதும் வங்கிப் பணியாளர் தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்யப் பட்டுள்ளது. முதல்முறையாக மெயின் தேர்வு அறிமுகப் படுத்தப்பட இருக்கிறது.
இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உட்பட அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கு (பாரத ஸ்டேட் வங்கி தவிர) தேவைப்படும் பணியாளர்களும், அதிகாரிகளும் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐபிபிஎஸ்) நிறுவனம் நடத்தும் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி யான பாரத ஸ்டேட் வங்கி மட்டும் பணியாளர்களை தேர்வு செய்ய தனியாக தேர்வு நடத்துகிறது.
ஐபிபிஎஸ் நிறுவனம் ஆண்டுக்கு ஒருமுறை வங்கிப் பணியாளர் தகுதித் தேர்வுகளை (அதிகாரி, எழுத்தர் பணிகளுக்கு தனித்தனி தேர்வு) நடத்துகிறது. முதலில் எழுத்துத் தேர்வும் அதைத்தொடர்ந்து நேர்முகத் தேர்வும் நடத்தப்படும். இவற்றில் விண்ணப்பதாரர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண் தகுதிச் சான்று வழங்கப்படும்.
ஒவ்வொரு பொதுத்துறை வங்கிகளும் தங்களுக்கு தேவைப் படும் பணியாளர்களை இந்த தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப் படையில்தான் தேர்வு செய் கின்றன. குறைவான மதிப்பெண் பெற்றவர்கள், தகுதித் தேர்வை மீண்டும் எழுதி அதிகரித் துக்கொள்ள முடியும். எழுத்துத் தேர்வில் பொது அறிவு, பகுத்து ஆராயும் திறன் (ரீசனிங்), அடிப்படை கணிதத்திறன், பொது ஆங்கிலம் ஆகிய 4 பகுதிகளில் இருந்து ‘அப்ஜெக்டிவ்’ முறையில் கேள்விகள் கேட்கப்படும்.
இந்நிலையில், வங்கிப் பணி யாளர் தேர்வு முறையில் ஐபிபிஎஸ் சில அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி, எழுத்துத் தேர்வில் புதிதாக மெயின் தேர்வு அறிமுகப்படுத்தப்படுகிறது. முதலில் முதல்நிலைத் தேர்வு நடக்கும். அதில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தகட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
மெயின் தேர்வு மதிப்பெண், நேர்முகத்தேர்வு மதிப்பெண் அடிப் படையில் மதிப்பெண் தகுதி (ரேங்க்) அளிக்கப்படும். முதல் நிலைத் தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாது. இந்த ஆண்டு அக்டோபரில் நடத்தப்பட உள்ள வங்கி அதிகாரி தகுதித் தேர்விலும், டிசம்பரில் நடக்கவுள்ள எழுத்தர் தகுதித் தேர்விலும் புதிய முறையை அறிமுகப்படுத்த ஐபிபிஎஸ் முடிவு செய்துள்ளது.
புதிய தேர்வுமுறை குறித்து சென்னை சாய் வெங்கடேஸ்வரா ஸ்கூல் ஆஃப் பேங்கிங் பயிற்சி நிறுவன நிர்வாக இயக்குநர் பி.அங்கமுத்து கூறுகையில், “தேசிய அளவில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 50 லட்சம் பட்டதாரிகள் ஐபிபிஎஸ் தேர்வு எழுதுகின்றனர். பழைய தேர்வு முறையில் சுமார் 3 மாதங்கள் படித்தாலே வெற்றி பெற்றுவிடலாம். ஆனால், புதிய தேர்வுமுறையில் மெயின் தேர்வு அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் குறைந்தபட்சம் ஓராண்டு பயிற்சி பெற்றால்தான் வெற்றிபெற முடியும்’’ என்றார். புதிய பாடத் திட்டம், வினா முறையை ஐபிபிஎஸ் விரைவில் அறிவிக்க உள்ளது. குறைந்தபட்சம் ஓராண்டு பயிற்சி பெற்றால்தான் வெற்றிபெற முடியும்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT