Published : 22 Jan 2015 08:03 AM
Last Updated : 22 Jan 2015 08:03 AM
ஆதார் அட்டை மற்றும் மக்கள் தொகைப் பதிவேடு அடிப்படையில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு தயாரிக்கும் திட்டப்பணிகளுக்கு, ஆம்னி அகேட் என்ற தனியார் ஐ.டி. நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
எந்த மாநிலத்தையும் பின்பற்றாத வகையில், சிறப்பு பாதுகாப்பு முறைகளுடன் இந்த ஸ்மார்ட் கார்டுகளை தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் 5 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பித்த உத்தரவின்படி, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு அடிப்படையில், குடும்ப அட்டைகளை ஸ்மார்ட் மின்னணு அட்டைகளாக உருவாக்க அறிவுறுத்தப்பட்டது. ஆந்திரம், சத்தீஸ்கர், குஜராத், இமாச்சலப்பிரதேசம், கர்நாடகம், மேகாலயம், மகாராஷ்டிரம், புதுவை, ராஜஸ்தான், சிக்கிம், மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் முதல்கட்டமாக முன்மாதிரி திட்டத்தை உருவாக்க மத்திய அரசு உத்தரவிட்டது.
இதன்படி ஹரியாணா, ஆந்திரம், கர்நாடகம், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் சோதனை அடிப்படையில் ஸ்மார்ட் கார்டு திட்டம் அமலுக்கு வந்துவிட்டது.
தமிழகத்தில் 2011-ல் குடும்ப அட்டைகளை ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றும் திட்டம் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கின. இதில், 2011-ம் ஆண்டு மக்கள் தொகை பதிவேடு மற்றும் ஆதார் எண் பதிவு விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் கார்டு தயாரிப்புக்கான தனியார் நிறுவனத்தைத் தேர்வு செய்யும் ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தப்புள்ளி விண்ணப்பங்கள், கடந்த நவம்பர் 20-ம் தேதி திறக்கப்பட்டு இரு நிறுவனங்கள் தகுதிப் பட்டியலில் தேர்வாகின. இந்நிறுவனங்களின் தொழில்நுட்ப விளக்கக் கூட்டம், கடந்த நவம்பர் 27-ம் தேதி அரசின் உணவுப் பொருள் வழங்கல் துறை தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் தொழில்நுட்ப விவரங்களை எல்காட் தொழில்நுட்பக் கமிட்டி மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறையின் நிதிக் கமிட்டி பரிசீலித்து, நிதி ஒப்பந்தப் புள்ளியில் குறைவாக குறிப்பிட்ட ஆம்னி அகேட் நிறுவனம் ஸ்மார்ட் கார்டு திட்டப்பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் ஜனவரி 7-ம் தேதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது, ஒரு கோடியே 98 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. இவற்றில் சுமார் 20 சதவீதத்துக்கு மேல் போலி எனத் தெரியவந்துள்ளது. அவற்றை நீக்கிவிட்டு, ஆதார் எண் பதிவில் முன்னணியில் உள்ள அரியலூர், பெரம்பலூர், மதுரை, புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஸ்மார்ட் கார்டுகளை முதல்கட்டமாக உருவாக்கவுள்ளோம்.
மத்திய அரசின் 39 கோடி ரூபாய் நிதியுதவியுடன், ஸ்மார்ட் கார்டு திட்டம் ரூ.318 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும். தமிழக ஸ்மார்ட் கார்டு வேறெந்த மாநிலத்தையும் சார்ந்திராமல், தனித்தன்மையுடனும், அரசின் கொள்கை முடிவுகளுக்கு உட்பட்டு பாதுகாப்பானதாகவும் இருக்கும்.
தற்போது ஸ்மார்ட் அட்டையில் தொழில்நுட்ப ரீதியான அம்சங்களை வடிவமைக்கும் பணி நடக்கிறது.
குடும்பத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் தனிநபர் விவரங் கள், முகவரி, ரேஷன் கடையின் எண், பொருட்கள் ஒதுக்கீடு, ஆதார் எண், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு எண் உள்ளிட்டவை ஸ்மார்ட் கார்டில் உள்ள மின்னணு அட்டையில் இடம் பெறும்.
மேலும் சுருக்கக் குறியீடுகள் மூலம் க்யூ.ஆர். மற்றும் பார் கோடு களாகவும் தனிநபர் விவரங்களை இடம் பெற வைக்க முடியும். இதன் மூலம் ஸ்மார்ட் போன் மொபைல் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தி, க்யூ.ஆர். கோடில் உள்ள விவரங்களை அறிந்து கொள்ளலாம். இந்தியாவில் முன்மாதிரியான அட்டையாக இந்த ஸ்மார்ட் மின்னணு ரேஷன் அட்டை உருவாக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT