Published : 23 Jan 2015 08:18 AM
Last Updated : 23 Jan 2015 08:18 AM
சன் டி.வி. நிறுவனத்துக்காக பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக கூறப் படும் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தலையீட்டால்தான் கைது நட வடிக்கைகள் தொடங்கியுள்ளன. இதற்கும் ஆர்.எஸ்.எஸ். இயக் கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி கூறியுள்ளார்.
தொலைபேசி இணைப்பு கள் முறைகேடாக பயன்படுத் தப்பட்டதாக கூறப்படும் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ போலீஸார், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் தனி செயலாளராக முன்பு இருந்த கவுதமன், சன் டி.வி. ஊழியர்கள் கண்ணன், ரவி ஆகியோரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். அறிவு ஜீவி ஒருவரை திருப்திப்படுத்த, அரசியல் காரணங்களுக்காக சிபிஐ அதிகாரிகள் இந்த கைது நடவடிக்கையை எடுத்ததாக தயாநிதி மாறன் நேற்று குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நாளிதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதியவரும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவருமான ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி கூறியதாவது:
சென்னையில் உள்ள தயாநிதி மாறன் வீட்டுக்கு 323 பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டதாகவும், அந்த இணைப்புகள் சன் டி.வி. அலுவலகத்துக்காக தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் 2007-ம் ஆண்டில் அரசுக்கு சிபிஐ அறிக்கை அளித்தது. இதுதொடர்பாக வழக்கு தொடரவும் அனுமதி கோரியது. எனினும் திமுக அங்கம் வகித்த அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இதற்கு அனுமதி வழங்கவில்லை.
நாளிதழில் நான் எழுதிய கட்டுரைகள் மூலம் இந்த முறைகேடுகள் வெளியுலகுக்கு தெரியவந்தன. அப்போது, என் மீது மானநஷ்ட வழக்கு தொடரப் போவதாக தயாநிதி மாறன் அறிவித்தார். அதை வரவேற்பதாக தெரிவித்தேன். ஆனால் என் மீது எந்த வழக்கும் தொடரவில்லை.
பின்னர், இந்த முறைகேடு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு சிபிஐக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கு கடந்த ஆண்டு ஜனவரியில் விசாரணைக்கு வந்தபோது, விரைவில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும் என நீதிமன்றத்தில் சிபிஐ உறுதி அளித்தது.
இந்த எல்லா நடவடிக்கைகளுமே ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த காலத்தில்தான் நடந்தன. இதற்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
2ஜி அலைக்கற்றை வழக்கில் உச்ச நீதிமன்ற தலையீட்டால் சிபிஐ நடவடிக்கை எடுத்தது. இப்போதும் உச்ச நீதிமன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கின் காரணமாக சிபிஐ அதிகாரிகள் எப்.ஐ.ஆர். பதிவு செய்து நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். ஆகவே, ஆர்.எஸ்.எஸ். தூண்டுதலால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்பதெல்லாம் பிரச்சினையை திசைதிருப்ப மேற்கொள்ளும் முயற்சிகளாகும்.
இவ்வாறு குருமூர்த்தி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT