Published : 24 Feb 2014 07:24 PM
Last Updated : 24 Feb 2014 07:24 PM

பேஸ்புக்கில் எதிரிகளைச் சமாளிப்பது எப்படி?- தென் மாவட்ட காங்கிரஸ் கட்சியினருக்கு மதுரையில் பயிற்சி

வரும் மக்களவைத் தேர்தலில் ஆதரவு திரட்டுவது எப்படி, எதிரிகளைச் சமாளிப்பது எப்படி என்று தென்மாவட்ட காங்கிரஸ் கட்சியினருக்கு பேஸ்புக் மூலம் மதுரையில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

தகவல் தொழில்நுட்பப் புரட்சி காரணமாக, தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக ஊடகங்களைப் பிரசாரத்துக்குப் பயன்படுத்தி வருகின்றன. காலமாற்றத்துக்கு ஏற்றபடி, காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறையானது தற்போது பேச்சாளர்கள், சமூக வலைதளங்கள், ஆய்வு மற்றும் பகுப்பாய்வுத் துறை என்று 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இதற்காக, அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கென்று கிட்கீ (ஜன்னல்) என்ற பெயரில் பேஸ்புக் பக்கம் உள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்ற பெயரில் மற்றொரு பேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சமூக வலைதளங்களை எப்படி கட்சியின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்திக் கொள்வது என்று ஞாயிற்றுக்கிழமை மதுரை அன்னபூர்ணா ஹோட்டலில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் மதுரை மாநகர், மதுரை தெற்கு, மதுரை வடக்கு, ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட கட்சியின் 16 மாவட்டங்களில் இருந்து தலா 5 இளைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகனின் மகனும், சமூக ஊடகத் துறையின் தமிழக நிர்வாகியுமான பி.எஸ்.ஜி.விஜய்ஞானதேசிகன் உள்பட 10 பேர் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர்.

எளிதில் மக்களை அடையும்

நிகழ்ச்சியில் அவர் பேசியது: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பேஸ்புக் பக்கம் சுமார் 30 ஆயிரம் `லை’க்களைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 பேருக்குப் பயிற்சி அளிக்கப்படுவதன் நோக்கம், நீங்களும் கட்சியின் கொள்கை, சாதனைகள், நிலைப்பாடு குறித்து பதிய வேண்டும் என்பதுதான்.

பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை 4 பேர் பார்த்தால் போதும், அவர்கள் அதுபற்றி சலூனிலோ, டீக்கடைகளிலோ பேசுவார்கள். இப்படி நம் கருத்து எளிதாக மக்களைச் சென்றடையும். நம்முடைய சாதனைகள், நம் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட புதிய திட்டங்கள், சட்டங்கள் பற்றி அனைவரும் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

சிலர் வேண்டுமென்றே தரக் குறைவான பதிவுகளை நம் பக்கங்களில் இடுவார்கள். அவர்களை ‘பிளாக்’ செய்வது எப்படி என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் சேதுராமன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் கே.பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

மாநிலத் துணைத் தலைவர் அன்னபூர்ணா தங்கராஜ், மாநில பொதுச் செயலர் பழனிவேல், செயற்குழு உறுப்பினர் காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மாநில துணைத் தலைவர் கோவிந்தராஜ் நிகழ்ச்சியை முடித்து வைத்தார்.தமிழக காங்கிரஸ் கட்சி 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்துக்கான பயிற்சி கடந்த 4 மாதங்களுக்கு முன் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. பிப். 23-ம் தேதி மதுரை மண்டல பயிற்சி நடந்துள்ளது.

அடுத்து திருச்சி, கோவை மண்டலங்களில் பயிற்சி நடைபெறும் என்று மாநில பொதுச் செயலர் கே.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x