Published : 07 Jan 2015 02:23 PM
Last Updated : 07 Jan 2015 02:23 PM

மீத்தேன், கூடங்குளம் திட்டங்களில் மக்களின் சந்தேகங்களைப் போக்குக: மத்திய அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்

மீத்தேன் ஆய்வுப் பணி, கூடங்குளம் அணு உலைத் திட்டங்களில் மக்களிடம் உள்ள அச்சத்தையும், சந்தேகங்களையும், எதிர்ப்பையும் போக்கி, பொதுமக்களின் கருத்தறிந்த பிறகே மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தியுள்ளது.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று கோவை துடியலூரில் நடந்தது. கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

அதிமுகவுக்கு கண்டனம்

* தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்தியப் பிரதமருக்கும், மத்திய அரசுக்கும், பாராட்டும், நன்றியும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, அரசியல் சுயலாபத்திற்காக, தமிழக மீனவர்கள் ஐந்து பேரின் விடுதலையை மத்திய அரசின் நாடகம் என்று பாராளுமன்றத்தில் கூறி, தமிழக மீனவர்கள் பிரச்சனையில் இரட்டைவேடம் போடும், அதிமுகவை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

'மக்களின் முதல்வர்' என அழைக்கக் கூடாது

* ஜெ.ஜெயலலிதாவிற்கு சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு சொன்னதும், தமிழகம் முழுவதும் வன்முறை சம்பவங்களும், அராஜகங்களும் அரங்கேறியது. பொதுச்சொத்துக்களுக்கு கடும் சேதம் ஏற்படுத்தப்பட்டது. இதை முன்னின்று நடத்தியவர்கள் மீது இதுவரையிலும், வழக்குகள் ஏதும் பதிவு செய்யப்படாமல் மூடி மறைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கையை விரைவில் எடுக்கவேண்டும்.

குற்றவாளி ஜெ.ஜெயலலிதாவின் படங்களை அரசு அலுவலகங்களில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும். ஒரு குற்றவாளியை மக்களின் முதல்வர் என்று அழைக்கக்கூடாது.

கிரானைடு முறைகேடுகள்

* கிரானைடு முறைகேடுகள் குறித்த விசாரணையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு முழு சுதந்திரம் அளித்து, முழுமையான ஒத்துழைப்பை கொடுத்து, கிரானைட் முறைகேடுகளை வெளிக்கொணர முன்வர வேண்டும்.

* தற்போது பால் விலை 34 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. உடனடியாக பால் விலையை குறைக்க வேண்டும்.

* தமிழக அரசு உடனடியாக ஆவின் பால் முறைகேடு குறித்த விசாரணையை சிபிஐ யிடம் ஒப்படைக்க வேண்டும். இதன் காரணமாக போடப்பட்ட அவதூறு வழக்கை திரும்பப் பெறவேண்டும்.

* மக்களை பெரிதும் பாதிக்கும் மின்கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

* உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.3500 வழங்க வேண்டும்.

மீத்தேன், கூடங்குளம் திட்டம்

காவிரி டெல்டா விவசாயிகள், மத்திய அரசு மீத்தேன் திட்டத்தின் ஆய்வுப்பணியை அப்பகுதியில் செயல்படுத்த கூடாது என்றும் அத்திட்டத்தை டெல்டா பகுதியில் செயல்படுத்தினால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு, டெல்டா பகுதியின் விவசாய நிலங்கள், வரும் காலங்களில் பாலைவனமாக மாறிவிடும் என்கின்ற அச்சத்தில் உள்ளனர்.

அதேபோல் கூடங்குளத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள அணு உலையால் பாதிப்பு ஏற்படும் என அப்பகுதிமக்கள் எதிர்த்துவருகின்றனர். இந்நிலையில் மேலும் இரண்டு அணு உலைகளை நிறுவிட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது அப்பகுதி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருபிரச்சனைகளிலும் மத்திய, மாநில அரசு, அப்பகுதி மக்களிடம் உள்ள அச்சத்தையும், சந்தேகங்களையும், எதிர்ப்பையும் போக்கி, பொதுமக்களின் கருத்தறிந்த பிறகே அதற்கிணங்க மத்திய, மாநில அரசு முடிவெடுக்க வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

தேசிய நதிகள் இணைப்புத் திட்டம்

* சாலை பணிகளில் நடைபெறும் முறைகேடுகளை களைந்து தமிழகத்தின் அனைத்து சாலைகளையும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.

* தமிழக அரசு யாரையும் குறைத்து மதிப்பிடாமல், தொழிலாளர்களின் கஷ்டங்களை அறிந்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அதேபோல் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

* தமிழக அரசு கர்ப்பிணித் தாய்மார்களையும், குழந்தைகளையும் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உயிரிழப்புகள் மீண்டும் ஏற்படாத வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

* படித்த மற்றும் படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலம், தமிழக பொருளாதாரத்தை வளர்ச்சியடைய செய்ய, தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

* நாட்டில் கடும் மழையினால் ஒருபுறம் அழிவு, கடும் வறட்சியால் மற்றொருபுறம் அழிவு என்ற இரு பிரச்சினைகளுக்கும், ஒரே தீர்வு தேசிய நதிகள் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.

மதுபானக் கடைகளை மூடுக

* தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் குறித்தும், அதில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்தும், சென்னை உயர்நீதிமன்றம் தானே முன்வந்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டுமென இப்பொதுக்குழு வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறது.

* மதுபானக் கடைகளை தமிழக அரசு உடனடியாக மூடவேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு தேமுதிக தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x