Published : 26 Jan 2015 01:32 PM
Last Updated : 26 Jan 2015 01:32 PM

யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளலாம்: வாக்குப்பதிவு ரசீது முறை திட்டத்தை ஸ்ரீரங்கத்தில் அமல்படுத்த ஆலோசனை

யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்துகொள்ள வசதியாக, ரசீது முறை திட்டத்தை ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அமல்படுத்துவது குறித்து தேர்தல் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்ற குற்றச்சாட்டு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இதை மறுத்துவரும் தேர்தல் ஆணையம், பல்வேறு செயல்முறை விளக்கங்களை அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளுக்கு அளித்து வருகிறது.

யாருக்கு வாக்களிக்கிறோம் என்பது உறுதி செய்யப்பட வேண்டும். இதற்காக வாக்களித்தவுடன் ரசீது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ரசீது வழங்கும் கருவியை இணைக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த முறையில் வாக்காளர்களுக்கு ரசீது வழங்கப்படாது. ஆனால், அவர்கள் யாருக்கு வாக்களித்தனர் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

இந்த திட்டம் பரீட்சார்த்த முறையில் கடந்த சில தேர்தல்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது மத்திய சென்னை தொகுதியில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் மட்டும் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததால், இத்திட்டம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில், தற்போது ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் இத்திட்டத்தை அமல்படுத்தலாமா என்பது குறித்து தமிழக தேர்தல் துறை அதிகாரிகளிடம், தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து தமிழகத் தேர்தல் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை அறிய அவர்களுக்கு ரசீது வழங்க முடியாது. அப்படி அளிப்பது, வாக்களிக்கும் ரகசிய முறைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே, வேறு விதமான முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ரசீது அச்சாகும் இயந்திரம் இணைக்கப்படும். வாக்காளர்கள் வாக்களித்ததும், அந்த இயந்திரத்தில் வங்கி ஏடிஎம் மெஷினில் வருவது போன்று வாக்களித்த சின்னம் பொறித்த ரசீது அச்சாகி வெளிவரும். அதை வாக்காளர் சில வினாடிகளுக்குள் பார்க்கலாம். பின்னர் அது தானாகவே, இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள மூடிய பெட்டிக்குள் விழுந்துவிடும். ரசீதை கையில் எடுத்து வரவோ, அதை புகைப்படம் எடுக்கவோ முடியாது. நாம் சரியாக வாக்களித்திருக்கிறோமா என்பதை அந்த ரசீதைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

தற்போது இந்தத் திட்டம் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் டெல்லி கன்டோன்மென்ட் மற்றும் புதுடெல்லி தொகுதிகளில் பரீட்சார்த்த முறையில் அமல்படுத்தப்பட உள்ளது. ஸ்ரீரங்கம் உட்பட பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தல்களிலும் இந்த முறையை பயன்படுத்துவது குறித்து, சில வாரங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

ஆனால், ரசீது வழங்கும் இயந்திரம் தயாராவதிலும் திட்டத்தை அமல்படுத்துவதிலும் சில அலுவலக நடைமுறைகள் தாமதமாகியுள்ளன. எனவே, ரசீது வழங்கும் இயந்திரத்தை தேர்தல் ஆணையம் அனுப்பினால், அதை ஏதாவது ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் பரீட்சார்த்த முறையில் சோதனை செய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x