Published : 04 Jan 2015 02:51 PM
Last Updated : 04 Jan 2015 02:51 PM

பறவைக் காய்ச்சல் தாக்கம் எதிரொலி: கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் முட்டை, கோழி கொண்டுவர தடை நீடிப்பு

பறவைக் காய்ச்சல் நோய் தாக்கம் எதிரொலியாக, மறுஉத்தரவு வரும் வரை கேரள எல்லைப் பகுதி வழியே கோழி, வாத்து மற்றும் முட்டை கொண்டு வருவதை அனுமதிக்கக் கூடாது என்று போலீஸார் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம், ஆலப்புழா பகுதிகளில் ஏராளமான கோழிகள், வாத்துகள் உள்ளிட்ட பறவைகள் கொத்து கொத்தாக இறந்தன. இதையடுத்து, இறந்த பறவைகளின் தசை மாதிரியை போபாலில் உள்ள தேசிய கால்நடை நோய் ஆய்வு மையத்தில் ஆய்வு செய்தபோது, அவற்றுக்கு பறவைக் காய்ச்சல் நோய் இருப்பது தெரிந்தது.

இதையடுத்து, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது. பறவைக் காய்ச்சல் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், பறவைகளை ஆய்வு செய்து வாரந்தோறும் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. அதன்படி, கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு கோழிகள், வாத்து போன்ற பறவை இனங்கள் மற்றும் முட்டைகள் கொண்டுவர தமிழக அரசு கடந்த நவம்பர் 28-ல் தடை விதித்தது.

கோவை, செங்கோட்டை, தேனி, கன்னியாகுமரி போன்ற கேரள எல்லை பகுதிகளில் சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. போலீஸ், கால்நடை பராமரிப்பு, சுகாதாரம், ஊரக வளர்ச்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் அடங்கிய 800 குழுக்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டு, பறவைக் காய்ச்சல் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் நுழையும் வாகனங்கள், மருந்து தெளித்த பிறகே அனுமதிக்கப்பட்டன. கடந்த சில மாதங்களாக இந்த நடவடிக்கை தொய்வடைந்து, வாகனங்கள் வழக்கம்போல், தமிழகத்துக்குள் எந்த தடுப்பு நடவடிக்கையும் இன்றி வந்து செல்கின்றன. இதனால் கேரளாவில் பறவைக் காய்ச்சல் முழுவதுமாக ஒழிக்கப்பட்டு, பறவைகளைக் கொண்டுவர தடை விலக்கப்பட்டதோ என்ற நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தமிழக கால்நடைப் பராமரிப்புத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

கடந்த டிசம்பர் முதல் வாரத்தில்கூட கோட்டயத்தில் ஒரு சில இடங்களில் புதிதாக பறவைக் காய்ச்சல் நோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. அதுகுறித்து, மத்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது. எனவே, தற்போது கேரளாவில் இருந்து பறவைகளை கொண்டுவருவதற்கான தடையை விலக்கவில்லை. அனைத்து சோதனைச் சாவடிகளிலும் வாகனங்களுக்கு பூச்சி ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்ட பிறகே தமிழகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை, தமிழக அரசு விதித்த தடை நீடிக்கும். எனவே, பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x