Published : 11 Jan 2015 11:47 AM
Last Updated : 11 Jan 2015 11:47 AM
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் பிடிக்கப் படும் அயிரை மீன் 1 கிலோ ரூ. 600-க்கு விற்கப்படுகிறது. ஆண்டுக்கு ஓரிரு முறை குளம், ஏரிகள் நிரம்பி மறுகால் பாயும்போது மட்டுமே கிடைப்பதால் பொதுமக்களிடையே அயிரை மீனுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
அசைவப்பிரியர்களுக்கு ஆடு, கோழிக்கு அடுத்து மீன் குழம்பு மீதுதான் அலாதி பிரியம். அதனால், மீன்களுக்கு ஆண்டு முழுவதுமே நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில், அபூர்வமாக சந்தைகளுக்கு வரும் உருவத்தில் சிறியதாகக் காணப்படும் அயிரை மீன்களுக்கு, திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் ஆண்டு முழுவதும் கடும் கிராக்கி ஏற்படும்.
திண்டுக்கல் மாவட்டத்துக்கு தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் இருந்து வரும் கடல் மீன்கள், இரண்டு, மூன்று நாள் கழித்து விற்பனைக்கு வருவதால் இந்த மாவட்ட மக்கள், பெரும்பாலும் குளம், அணை மீன்களையே விரும்பி சாப்பிடுகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 3 ஆண்டாக பருவமழை ஏமாற்றியதால் கடும் வறட்சி ஏற்பட்டது. அணைகள், குளங்கள், ஏரிகள் தண்ணீரின்றி வறண்டதால் அயிரை மீன்கள் உற்பத்தி அபூர்வமாகி கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன் தொடர்ந்து ஒரு மாதம் நல்ல மழை பெய்தது. ஆத்தூர் காமராஜர் அணை, புல்வெட்டி கண்மாய், நடுக்குளம், செங்குளம், மருதாணிக்குளம், மற்றும் ஆத்தூர், பழநி ஒன்றியத்தில் குளங்கள் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள அணை, குளங்கள், ஏரிகள் நீர் நிரம்பி மறுகால் பாய்கின்றன. அதனால், தற்போது இந்த அணை, குளம், ஏரிகளில் மீன் உற்பத்தி அதிகரித்துள்ளது.
குறிப்பாக குளங்கள் மற்றும் ஏரிகளில் நீர் நிரம்பி வாய்க்காலில் தண்ணீர் மறுகால் பாயும் போது மட்டுமே அயிரை மீன்கள் உற்பத்தியாகும். தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நீர் நிலைகள் நீர் நிரம்பி மறுகால் பாய்வதால் அயிரை மீன் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதனால், மீன் சந்தைகளுக்கு அனைத்து வகை குளம், அணை மீன்கள் வந்தாலும், அரிதான அயிரைமீன்களை மீன் பிரியர்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
சளி, இதய நோய்க்கு நல்ல மருந்து
இதுகுறித்து மீன் வியாபாரி கணேசன் கூறும்போது, சராசரி யாக கட்லா, கெண்டை, குரவை, தேளிவெரா ஆகிய மீன்கள் மார்க்கெட்டில் 1 கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்கப்படுகின்றன. வாளை மற்றும் ஊளி மீன்கள், 1 கிலோ ரூ.300-க்கு விற்கப்படுகிறது. ஆனால் அபூர்வமாக கிடைக்கும் மீன் என்பதால் அயிரை மீன்கள் 1 கிலோ ரூ.600-க்கு விற்கப்படுகிறது. சளி தொந்தரவு மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கு அயிரை மீன் நல்ல மருந்தாக இருப் பதால் மார்க்கெட்டில் அயிரை மீனுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது.
கடந்த ஆண்டு 1 கிலோ அயிரைமீன் ரூ.400 முதல் 500 வரை விற்றது. தற்போது ரூ.500 முதல் ரூ.600 வரை விற்கப்படுகிறது. இந்த மாதத்திலே ரூ.800 வரை அயிரை மீன்கள் விலை உயரும் வாய்ப்புள்ளது. இந்த மீன்களின் எந்த பகுதியையும் நீக்காமல் அப்படியே குழம்பு வைத்து சாப்பிடலாம். சுவை மிகுதியாக இருக்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT