Last Updated : 03 Jan, 2015 08:43 AM

 

Published : 03 Jan 2015 08:43 AM
Last Updated : 03 Jan 2015 08:43 AM

தமிழகத்தில் புத்தாண்டு மது விற்பனை ரூ.165 கோடி: எதிர்பார்த்ததை விட குறைவு

தமிழகத்தில் ஆங்கிலப் புத்தாண்டின்போது 2 நாட்களில் ரூ.165 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இது எதிர்பார்த்த அளவை விட குறைவு என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டு, பொங்கல் மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகைக் காலங் களில் மது விற்பனை அதிகரிக்கும். இந்தாண்டு வருமானம் அதிகம் கிடைத்தாலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது விற்பனை அளவு குனறந்துள்ளது.

இது குறித்து டாஸ்மாக் வட்டா ரங்கள் நேற்று தெரிவித்ததாவது:

ஆங்கிலப் புத்தாண்டை பொறுத்தவரை அதற்கு முந்தைய தினமான டிசம்பர் 31-ம் தேதிதான் மது விற்பனை கணிசமான அளவில் நடைபெறும். இந்த ஆண்டில் அன்றைய தினம் ரூ.85 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. புத்தாண்டு தினத்தன்று ரூ.80 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. இரு தினங்களிலும் சேர்த்து ரூ.165 கோடி வருமானம் கிடைத்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது, டிச.31-ம் தேதி ரூ.82 கோடி, ஜனவரி 1-ம் தேதி ரூ.72 கோடி என ரூ.154 கோடிக்கு விற்பனையானது.

இம்முறை, கடந்த ஆண்டை விட ரூ.11 கோடிக்கு விற்பனை அதிகம் நடந்துள்ளபோதிலும் கடந்த புத்தாண்டுக்குப் பிறகு மது வகைகளின் விலை இரு முறை உயர்த்தப்பட்டுள்ள நிலை யில், எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. மதுவின் விற்பனை அளவைப் பொறுத்த வரை சரிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மேற்கண்ட இரு தினங்களில், இந்தியாவில் உற்பத்தியாகும் அயல்நாட்டு மது வகைகள் 3.2 லட்சம் பெட்டிகளும், பீர் 1.65 லட்சம் பெட்டிகளும் விற்பனை செய்யப்பட்டன. அது, இந்தாண்டில் முறையே, 3.1 லட்சம் பெட்டிகளாகவும், 1.40 லட்சம் பெட்டிகளாகவும் குறைந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

இது மதுவின் மீதான நாட்டம் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வருவதைக் காட்டுகிறது. கடந்த நிதியாண்டில் மதுவுக்கான ஆயத் தீர்வை மூலம் ரூ.5,034 கோடி, விற்பனை வரி மூலமாக ரூ.16,607 கோடி என அரசு மொத்தம் ரூ.21,641 கோடி வருவாய் ஈட்டியது. இந்த நிதியாண்டுக்கு, முறையே ரூ.6,040 கோடி மற்றும் ரூ.20 ஆயிரம் கோடி மொத்தம் ரூ.26,040 கோடி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த டிசம்பர் வரையில் ஆயத்தீர்வை ரூ.4,300 கோடியும், விற்பனைவரி ரூ.14,300 கோடியுமாக சுமார் ரூ.18,600 கோடி அளவுக்கே வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. எனவே இலக்கை எட்டுவது சிரமம் என்றே தெரிகிறது.

தமிழகத்தில் மது விலை உயர்வு, மதுவுக்கெதிரான பிரச்சாரம் பரவலாக அதிகரித்திருப்பது, அது தொடர்பான முயற்சி கள் பலதரப்புகளில் தீவிரப்படுத்தப் பட்டிருப்பது, நெடுஞ்சாலைகளில் உள்ள சில மதுக்கடைகள் மூடப்பட்டது ஆகியவை மது விற்பனை சரிந்ததற்கான காரணங்கள் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x