Last Updated : 18 Jan, 2015 10:01 AM

 

Published : 18 Jan 2015 10:01 AM
Last Updated : 18 Jan 2015 10:01 AM

தமிழ் சினிமா சூழல்தான் உலக அளவில் சிறப்பாக உள்ளது: இலக்கிய விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேச்சு

தமிழ் சினிமா சூழல்தான் உலகின் சிறந்த சூழலாக இருக்கிறது என்று ‘தி இந்து’ இலக்கிய விழாவில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் பேசினார்.

‘லிட் பார் ஃலைப்’ என்ற பெயரில் ‘தி இந்து’ நடத்தும் இலக்கிய விழா, சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவின் 2-ம் நாளான நேற்று, ‘கதை புதிதா?, கதை சொல்லும் விதம் புதிதா?’ என்ற தலைப்பில் தமிழ் திரைத்துறையைச் சார்ந்தவர்கள் பங்கேற்ற குழு விவாதம் நடந்தது.

இதில் இயக்குநர்கள் வெற்றிமாறன், வசந்தபாலன், ரோகிணி ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியை எழுத்தாளரும் திரைப்பட விமர்சகருமான அ.ராமசாமி ஒருங்கிணைத்தார். இயக்குநர்கள் பேசியதாவது:

வெற்றிமாறன்

உலகத்தரம் வாய்ந்த படம் எது என்பதை முதலில் நாம் வரையறுத்துக்கொள்ள வேண்டும். உலகில் நிறைய பேர் பார்க்கும் படம்தான் உலக சினிமாவாக இருக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் ஹாலிவுட் படங்களைத்தான் அதிகம் பேர் பார்க்கின்றனர். ஆனால், ஹாலிவுட் படங்கள் பெரும்பாலும் குப்பைதான். ஒரு பார்முலாவை கண்டுபிடித்து, அதற்குள் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கின்றனர். நாமும் அதைத்தான் பார்த்து படம் எடுத்து வருகிறோம். அந்த வெகுஜன சினிமாவைத் தாண்டி நம்மால் வரமுடியவில்லை.

எந்த மண்ணில், எந்த மொழியில், எந்த மக்களை மையமாக வைத்து பிரதிபலிக்கிறோமோ அதுதான் உலக சினிமா என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதைத்தான் கடந்த 10 ஆண்டுகளாக பலரும் முயற்சி செய்துவருகிறோம். தமிழ் சினிமாவில் மட்டும்தான் சிறப்பான தரம் இருக்கிறது. நாம், நம் மக்களுக்காக எடுக்கும் படங்கள்தான் உலக சினிமாவாக இருக்க வேண்டும். தற்போதைய தமிழ் சினிமாவின் இடம் அற்புதமானது. தமிழ் சினிமா சூழல்தான் உலகின் சிறந்த சூழல் என்று நினைக்கிறேன்.

வசந்தபாலன்

தமிழ் சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு முயற்சியில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. மகேந்திரன், ருத்ரய்யா, பாலுமகேந்திரா இப்படி ஒவ்வொரு இயக்குநர்களின் காலகட்டத்திலும் உலக சினிமாவுக்கான விதை விதைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ‘வீடு’, ‘முள்ளும் மலரும்’, ‘சந்தியாராகம்’ ‘உதிரிப்பூக்கள்’ போன்ற படங்களில் உலக சினிமாவுக்கான ஒரு கூறு இருந்தது. இப்போது தமிழ் சினிமாவை வியாபார ரீதியாகவும், ஜனரஞ்சகமாகவும் கொண்டுபோக வேண்டிய சூழல் உள்ளது.

ஓர் ஈரானிய படத்தை உலக சினிமாவாக கொண்டுபோகும் போது வியாபார ரீதியான சிக்கல் இல்லை. ஆனால் தமிழ் சினிமாவை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு கொண்டுபோகும்போது அதற்கான போராட்டம் பெரிதாகவே உள்ளது.

ரோகிணி

காதல் களம்தான் தமிழ் சினிமாவை ஆள்கிறது. அதை தாண்டி யாரும் இங்கே எதையும் சொல்ல முன்வருவதில்லை. கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான முகங்களை தேர்வு செய்வதில் கவனம் செலுத்துவதைப்போல கதைக்கும் கவனம் செலுத்த வேண்டும். நட்பை பற்றி சொல்லும்போதும் வன்முறையை அதிகம் கையாளுகின்றனர். இதையெல்லாம் கவனிக்க வேண்டும். காதல், நட்பை கடந்து பல களங்களை சிந்திக்கலாமே?

இவ்வாறு அவர்கள் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x