Published : 14 Apr 2014 09:50 AM
Last Updated : 14 Apr 2014 09:50 AM

சேது சமுத்திரத் திட்டத்தில் நடந்தது என்ன?- உரிய நேரத்தில் பேசுவேன்: அழகிரி ஆவேசம்

“சேது சமுத்திரத் திட்டத்தில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியும். அது குறித்து உரிய நேரத்தில் பேசுவேன்” என்று அழகிரி பேசினார்.

நாகர்கோவிலில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற தனது ஆதரவாளர் இல்ல காதணி விழாவில் பங்கேற்று அழகிரி பேசியதாவது:

குமரி மாவட்டத்தில் உள்கட்சித் தேர்தல் நடந்தபோது பொறுப்புகள் கிடைக்கும் என்றும் பதவிகள் தரப்படும் என்றும் கூறி பலரும் ஏமாற்றப்பட்டதாக தெரிவித்தனர். அவர்களின் குறைகள் தேர்தலுக்கு பின் நிவர்த்தியாகும்.

இங்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் பற்றியும், தற்போதைய திமுக எம்.பி. ஹெலன் டேவிட்சனின் சாதனைகள் குறித்தும் பத்திரிக்கைகளில் படித்தேன். ஆனால், தற்போதைய எம்.பி.க்கு இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.

கனிமொழி டெல்லி திகார் சிறையில் இருந்தபோது, ஹெலன் டேவிட்சன் தினம் சந்தித்து பேசினார். எனவே தான் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தி.மு.க. வேட்பாளர் 4-வது இடத்துக்கு தள்ளப்படுவார். விருதுநகர், தூத்துக்குடி வேட்பாளர்களுக்கும் இதே நிலைதான். மதுரையில் போட்டியிடும் திமுக வேட்பாளர், ‘அழகிரி ஆதரித்தால் வெற்றி பெறுவேன்’ என்று கூறியுள்ளார்.

ஆனால், இதுவரை என்னை சந்திக்கவில்லை. டி.ஆர்.பாலு பெரும்புதூர் தொகுதியில் இருந்து தஞ்சாவூருக்கும், அரக் கோணத்தில் போட்டியிட்டவர் பெரும்புதூருக்கும் மாறியுள் ளனர். தொகுதி மாறினால் வெற்றி பெற இவர்கள் என்ன எம்.ஜி.ஆரா? கலைஞரா? சேது சமுத்திரத் திட்டத்தில் என்ன நடந்தது என எனக்குத் தெரியும். அது குறித்து உரிய நேரத்தில் பேசுவேன்.

அண்ணா அறிவாலயத்தில் எனக்கும் பங்கு இருக்கிறது. என்னை தி.மு.க.வில் இருந்து பிரிக்க முடியாது. தலைவர் கருணாநிதி இன்று மதுரைக்கு பிரச்சாரம் செய்ய வருகின்றார்.

அப்போது அவர் பாசத்தால் என்னை சந்தித்து விட்டால், அவரையும் கட்சியில் இருந்து நீக்கி விடுவார்கள் என்பதால்தான் இன்று நாகர்கோவிலுக்கு வந்தேன்.

தேர்தலுக்கு பின்பு நிலைமை மாறும். தலைவர் நம்மை அரவணைக்கும் நிலை உருவாகும் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x