Published : 02 Feb 2014 04:51 PM
Last Updated : 02 Feb 2014 04:51 PM
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிரதமராகும் வாய்ப்புகள் இயற்கையாகவே உருவாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் தேசியக் குழுத் தலைவர் ஏ.பி.பரதன் கூறியுள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை அதிமுக கூட்டணியில் இடம்பெறுகின்றன. இதை உறுதி செய்யும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், தேசிய பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி மற்றும் தமிழக மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை போயஸ் கார்டன் வந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தனர்.
அவர்களிடையே சுமார் 40 நிமிடங்களுக்கு பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர், ஜெயலலிதா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
ஜெயலலிதா:
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மற்ற விவரங்கள் பின்னர் முடிவு செய்யப்படும். வரும் தேர்தலில் அமைதி, வளமை மற்றும் முன் னேற்றம் என்ற அடிப்படையில் தேர்தலை சந்திக்க உள்ளோம்.
ஏ.பி.பரதன்:
அதிமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறும்.
கேள்வி:
பொதுவாக தமிழகத்திலிருந்து, குறிப்பாக முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பிலும் உள்ளது. உங்கள் கருத்து என்ன?
ஏ.பி.பரதன்:
எங்கள் கூட்டணி ஏற்கெனவே நாங்கள் கூறியதுபோல் வெற்றி பெற்றால், அதற்கான வாய்ப்புகள் இயற்கையாகவே உருவாகும்.
ஜெயலலிதா:
தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே லட்சியமாகும். அமைதி, வளமை மற்றும் முன்னேற்றம் என்ற தாரக மந்திரத்துடன், எங்கள் அணி வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்து வெற்றிபெறும். கூட்டணி குறித்து பேச்சு நடத்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தும் நானும் திங்கள்கிழமை சந்திக்கவுள்ளோம்.
சுதாகர் ரெட்டி:
காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சியை அப்புறப்படுத்துவதே எங்களது நோக்கமாகும். செய்ய வேண்டி யதை செய்யாமல், செய்யத் தேவையில்லா ததை செய்துவரும் மத்திய அரசின் நட வடிக்கைகளுக்கு முடிவு கட்டுவோம். மதச் சார்பற்ற, முன்னேற்றம் நிறைந்த ஜனநாயக அரசை ஏற்படுத்துவோம். அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் அரசுக்கு எதிரான கட்சிகளை இணைத்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தென்னிந்தியாவில் தமிழகத்திலிருந்து ஒருவர் பிரதமராக வரவேண்டுமென்ற எண்ணம் தமிழக மக்களிடையே நீண்டகால மாக இருந்து வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிரதமராவது குறித்து பலமுறை கேள்விகள் எழுந்துள்ளன. தற்போது காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத அணியில் அதிமுக இடம்பெறும் நிலையில், மூன்றாவது அணி சார்பில் ஜெயலலிதா பிரதமர் வேட்பாளராகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
சமீபத்தில் சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மானத்தில், “தமிழகத்திலிருந்து ஒருவர் நாட்டுக்குத் தலைமை ஏற்கும் காலம் கனிந்திருக்கிறது. இந்திய நாட்டை வளமான நாடாக மாற்ற, நாட்டுக்குத் தலைமை தாங்கி நடத்தும் தகுதி ஜெயலலிதாவுக்கு மட்டுமே உள்ளது” என கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT