Published : 12 Jan 2015 09:16 AM
Last Updated : 12 Jan 2015 09:16 AM

பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல ஒரே நாளில் 8,000 பேர் டிக்கெட் முன்பதிவு: மொத்தம் 7,250 சிறப்பு பஸ்கள் இயக்கம்

பொங்கல் பண்டிகையை யொட்டி சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று ஒரே நாளில் 8,000 பேர் பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்தனர். தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 7,250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது.

சென்னையில் இருந்து மட்டும் வெளியூர்களுக்கு 4,655 பஸ்கள் இயக்கப் படுகிறது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஏற்கெனவே 5 கவுன்ட்டர்கள் நிரந்தரமாக உள்ளன. இந்நிலையில், கூடுதலாக 20 சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. முதல்நாளில் 8 ஆயிரம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். மேலும், 300 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் உள்ள ஊர்களுக்கு பயணம் செய்பவர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நெரிசல் குறைக்க மாற்று வழி

இது தொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பொங்கல் பண்டிகைக்கு மொத்தம் 7,250 பஸ்கள் இயக்கப்படுவதால் பயணிகள் அதிகம் பேர் வருவார்கள். டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த 2 நாட்களில் கணிசமான அளவுக்கு மக்கள் வந்து டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். சிலர், முன்பதிவு செய்யப்படாத விரைவு பஸ்களில் செல்கிறார்கள். முதல்நாளில் மட்டுமே 8 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். நாளை மற்றும் நாளை மறுநாள் இந்த எண்ணிக்கை மேலும், பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்யாதவர்கள் அதிகமாக வரும்போது, டோக்கன் முறைப்படி பயணிகளை பஸ்களில் ஏற்றிச் செல்வார்கள். மேலும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஒரகடம், மதுரவாயல் வழியாக கோயம்பேடு வரவும், செங்கல் பட்டு, திருப்போரூர், கேளம்பாக்கம், சோழிங்கநல்லூர் வழியாகவும் அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களின் வசதிக்காக நேற்று 420 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று மொத்தம் 720 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்’’ என்றனர்.

அமைச்சர் ஆய்வு

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார். அதில், சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் பயணிகளிடமும் பஸ் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x