Last Updated : 27 Jan, 2015 08:52 AM

 

Published : 27 Jan 2015 08:52 AM
Last Updated : 27 Jan 2015 08:52 AM

ஸ்ரீரங்கம் தொகுதியில் கிராம மக்கள் சாலை மறியல்: அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிக்க எதிர்ப்பு- அடி குழாயில் கருப்பு நிறத்தில் குடிநீர் வருவதாக புகார்

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட என்.சாத்தனூர் கிராம மக்கள், அடிப்படை வசதிகள் ஏதுமின்றித் தவிப்பதாகக் கூறி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ரங்கம் தொகுதி இடைத் தேர்தல் பிப்ரவரி 13-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அத்தொகுதியின் அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள சீ.வளர்மதி தொகுதிக்குட்பட்ட பகுதியில் அதிமுகவினருடன் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அந்தநல்லூர் ஒன்றியம் மருதாண்டக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட என்.சாத்தனூர் கிராமத்தில் வாக்கு சேகரிக்கத் திட்டமிட்டிருந்தார்.

இதையறிந்த கிராமமக்கள் வளர்மதி வாக்கு சேகரிக்க வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராமத்தில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு சென்ற போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தியதுடன், இளைஞர்கள் சிலரை போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, போலீஸார் அவர்களை கீழே இறக்கிவிட்டனர்.

சாலைமறியல் குறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த சுதாகரன் என்பவர் கூறியபோது,

“எங்கள் கிராமத்தில் 1,500 குடும்பங்கள் உள்ளன. கிராமத்துக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து தருமாறு ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணகுமாரிடம் பலமுறை முறையிட்டோம். ஆட்சியரிடமும் மனு அளித்தோம். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை.

கிராமத்தில் இறந்தவர்களின் சடலத்தை மயானத்துக்கு கொண்டு செல்ல சாலைவசதி இல்லை. குடிநீராகப் பயன்படுத்தும் அடிபம்ப்-பில் இருந்து கழிவுநீரைப் போன்று கருப்பு நிறத்தில்தான் தண்ணீர் வருகிறது. சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளன.

இயற்கை உபாதைக்கான கழிவறை வசதி போன்ற முக்கிய அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுகிறோம். இரவில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இவ்வூரில் உள்ள பாரம்பரியமிக்க, தண்ணீரைப் பருகினால் பாம்பு தீண்டியவர்களுக்கு விஷமுறிவு ஏற்படுட்டு குணமடைவர் என நம்பப்படும் சிறப்புமிக்க சின்னாசியப்பன் கோயில் குளம், கழிவுநீர் கலந்து மாசடைந்த நிலையில் உள்ளது. குளத்தைச் சீரமைக்கக் கோரி பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை. அதனால்தான் வேட்பாளர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர் என்றார்.

இதுதொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணகுமாரிடம் கேட்டபோது, “கோரிக்கைகள் தொடர்பாக எவ்வித மனுவையும் யாரும் என்னிடம் வழங்கவில்லை. திமுகவைச் சேர்ந்த சிலரின் தூண்டுதலின்பேரில் மக்களில் சிலர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது கிராம மக்களிடம் நிலைமையை எடுத்துக்கூறியுள்ளோம். எனவே, வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை” என்றார்.

இதனிடையே தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் கிராம மக்கள் சுட்டிக்காட்டிய பகுதிகளை நேரில் பார்வைட்டு, மக்களின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்க 2 மணி நேரத்தில் பணிகள் தொடங்கும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x