Published : 09 Jan 2015 10:17 AM
Last Updated : 09 Jan 2015 10:17 AM
கரும்புக்கு ஒரு டன்னுக்கு ரூ. 2,650 என்று தமிழக அரசு விலை நிர்ணயித்திருப்பதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனமும், அதிருப்தியும் தெரிவித்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் மாநில தலைவர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஒரு டன் கரும்புக்கு 2014-15-ம் ஆண்டில் மத்திய அரசு டன் ஒன்றுக்கு கொடுக்கும் ரூ.2,200 மற்றும் மாநில அரசு வழங்கும் ரூ.450 சேர்த்து ரூ.2,650 என்று விலை அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, மாநில அரசு கடந்த ஆண்டு வழங்கிய விலையில் ரூ.100 குறைத்து அறிவித்திருப்பது தமிழக கரும்பு விவசாயிகளுக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகமாகும். உரம், டீசல் விலை உயர்வு, வெட்டுக்கூலி உயர்வு என உற்பத்திச் செலவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது’’ என்று கூறியுள்ளார்.
ஜனவரி 12-ல் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரும்பு டன் ஒன்றுக்கு மத்திய அரசு அறிவித்த ரூ.2,200 உடன் மாநில அரசு ரூ.450 சேர்த்து, ரூ.2,650ஆக மாநில அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசு அறிவித்த விலை குறைவாக இருப்பதால் நாடு முழுவதும் விவசாயிகள் போராடுகின்றனர். இந்நிலையில் மாநில அரசு விலையை குறைத்து அறிவித்திருப்பது கரும்பு விவசாயிகளுக்கு ஏமாற்றமளிக்கிறது.
2012-13-ம் ஆண்டில் கரும்பு டன் ஒன்றுக்கு மத்திய அரசின் விலை ரூ. 1,700 ஆகவும் மாநில அரசின் விலை ரூ.650 ஆகவும் இருந்தது. 2013-14-ம் ஆண்டில் மத்திய அரசின் விலை ரூ.2,100 ஆகவும் மாநில அரசின் விலை ரூ.550 ஆகவும் இருந்தது. 2014-15-ம் ஆண்டில் மத்திய அரசு ரூ.2,200 ஆகவும், மாநில அரசின் விலை ரூ.450 ஆகவும் இருக்கிறது. தமிழ்நாட்டில் விவசாயிகள் போராடி பெற்ற விலையை குறைத்து அறிவித்து கரும்பு விவசாயிகளை அரசு வஞ்சித்து விட்டது.
கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3,500 வழங்கிட வேண்டும் என்றும் தனியார் ஆலைகள் தர வேண்டிய ரூ. 362 கோடி பாக்கித் தொகையை 15 சதவீதம் வட்டியுடன் தர வேண்டும் என்றும் கோரி மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு ஜனவரி 12-ம் தேதி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT