Published : 18 Jan 2015 11:55 AM
Last Updated : 18 Jan 2015 11:55 AM

வங்கி ஊழியர்கள் கோரிக்கைகள் குறித்து நாளை பேச்சுவார்த்தை: உடன்பாடு ஏற்படாவிட்டால் 4 நாள் வேலை நிறுத்தம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக இந்திய வங்கிகள் சம்மேளனத்துடன் வங்கி ஊழியர்கள் சங்கம் நாளை (19ம் தேதி) மும்பையில் பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், வங்கிகள் தொடர்ந்து ஆறு நாட்கள் மூடப்படும் நிலை ஏற்படும்.

ஊதிய உயர்வு, வாரத்துக்கு ஐந்து நாட்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாதம் 7-ம் தேதி, ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி ஊழியர் சங்கங்கள் தீர்மானித்தன. மேலும், வரும் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை நான்கு நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்தன.

இந்நிலையில் இந்திய வங்கிகள் சம்மேளனத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் 7-ம் தேதி நடைபெறவிருந்த வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டது. எனினும், இதுதொடர்பாக, வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கிகள் சம்மேளனத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி வரும் 21ம் தேதி வேலை நிறுத்தத்தை தொடங்கினால் வங்கிகள் தொடர்ந்து ஆறு நாட்கள் மூடப்படும் நிலை ஏற்படக் கூடும். 21ம் தேதி புதன்கிழமை தொடங்கும் வேலை நிறுத்தம் 24ம் தேதி சனிக்கிழமை நிறைவடையும். மறுநாள் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை.

அதற்கு அடுத்த நாள் 26ம் தேதி குடியரசு தினம் அரசு விடுமுறை என்பதால், அன்றைய தினமும் வங்கிகள் செயல்படாது. இதனால், வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கக் கூடிய நிலை ஏற்படும். இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் மூத்த துணைத் தலைவர் சி.எம்.பாஸ்கரன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

நாங்கள் 23 சதவீதம் ஊதிய உயர்வை வலியுறுத்தி வருகிறோம். ஆனால், வங்கி நிர்வாகம் 11 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக ஊதிய உயர்வை அளிக்க முன்வந்துள்ளது. இதை ஏற்று, கடந்த 7-ம் தேதி நடத்த இருந்த வேலை நிறுத்தத்தை ஒத்தி வைத்தோம்.

இந்நிலையில் 19ம் தேதி (நாளை) ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் உடன்பாடு ஏற்பட்டால் 21-ம் தேதி அறிவித்த வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவோம். இல்லாவிட்டால் எங்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை. ஏற்கனவே, இதுதொடர்பாக நோட்டீஸ் வழங்கியுள்ளோம். நாங்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத அளவுக்கு வங்கிகள் நிர்வாகம் பேச்சுவார்த்தையில் உடன்பாட்டை எட்ட வேண்டும்.

இவ்வாறு பாஸ்கரன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x