Published : 03 Apr 2014 12:00 AM
Last Updated : 03 Apr 2014 12:00 AM
தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் வெப்ப நிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. சென்னையில் ஏப்ரல் மாதத்தில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்ச வெப்ப நிலை 101.12 டிகிரி நேற்று பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயில் அதிகமாகி வருகிறது. வேலூர், மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது.
வேலூரில் அதிக பட்சமாக 104.72 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. திருச்சி, திருப்பத்தூர் மற்றும் கரூர் பரமத்தியில் 104 பாரன்ஹீட் வெப்பமும், சேலத்தில் 103.1 பாரன்ஹீட் வெப்பமும், பாளையங்கோட்டையில் 102.02 பாரன்ஹீட் வெப்பமும் , மதுரையில் 102.56 பாரன்ஹீட் வெப்பமும், தரும புரியில் 102.2 பாரன்ஹீட் வெப்பமும், சென்னையில் 101.12 பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது.
சென்னையில் ஏப்ரல் மாதத்தில் 2006-ம் ஆண்டு 107.78 பாரன்ஹீட் பதிவானது. அதன் பிறகு, தற்போது சென்னையில் பதிவாகியுள்ள 101.12 பாரன்ஹீட் தான் கடந்த எட்டு ஆண்டுகளில் அதிகபட்ச வெப்பமாகும். கடந்த பத்தாண்டுகளில் ஏப்ரல் மாதத்தின் அதிகபட்ச வெப்ப நிலை 14-ம் தேதிக்கு மேல் தான் பதிவாகியுள்ளது (2010-ம் ஆண்டு தவிர). ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி 101.12 பாரன்ஹீட் பதிவாகியுள்ளது. வரும் நாட்களில் வெயில் இன்னும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் மாதங்களில் இதுவரை அதிக பட்ச வெப்ப நிலையாக 1908-ம் ஆண்டு 109.04 பாரன்ஹீட் பதிவாகியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT