Published : 24 Jan 2015 10:58 AM
Last Updated : 24 Jan 2015 10:58 AM
உடுமலைப்பேட்டை அருகே உள்ள சோமவாரப்பட்டி கிராமத்தில் கி.மு. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சேர மன்னர்களின் முத்திரை, மண் விளக்குகள் உள்ளிட்ட தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
திருப்பூரைச் சேர்ந்த வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையம் கொங்கு பகுதிகளில் தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் உடுமலைப்பேட்டை அருகே இருக்கும் சோமவாரப்பட்டி, எஸ்.அம்மாபட்டி, பெதப்பம்பட்டி, கொங்கல் உள்ளிட்ட பகுதிகளில் அந்த ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தூரன் சு. வேலுசாமி, நாகராசு கணேஷ் குமார், ரவிக்குமார், பொன்னுசாமி, சதாசிவம், ரவிச்சந்திரன் ஆகியோர் மேற்பரப்பு ஆய்வுகளை மேற்கொண்டனர்.
அப்போது சங்ககால சேர மன்னர்களின் முத்திரை (இலச்சினை), அரிய வகைக் குறியீடுகள், தறிக்கோல், தாங்கிகள், இரு மண் விளக்குகள், மூன்று பலகறைப் பாசிகள் (சோழிகள்), 30 பல வண்ண மணிகள் ஆகிய தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஆய்வாளர் ரவிக்குமார் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
சங்க கால சேர மன்னர்கள் வில், அம்பு முத்திரையை தங்களது இலச்சினையாகப் பயன்படுத்தினர். கொங்கு மண்ணில் சேரர்கள் ஆட்சி செய்ததை புகளூரில் இருக்கும் தமிழ் - பிராமி கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. சேர மன்னர்களின் நாணயங்களில் ஒருபக்கம் யானை முத்திரை மற்றொரு பக்கத்தில் வில் - அம்பு முத்திரை, அதன் கீழே அங்குசம் முத்திரையும் காணப்படும்.
தற்போது கிடைத்துள்ள முத்திரை சுடு மண்ணாலானது. இது 15 செ.மீ. சுற்றளவும், 5 செ.மீ. விட்டமும் கொண்டது. சேரர்களின் நாணயங்களில் உள்ளதுபோலவே இதிலும் வில், அம்பு குறியீடும், அதன் கீழ் பகுதியில் அங்குசம் குறியீடும் உள்ளது. இதன் மூலம் இந்த முத்திரை கி.மு. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் காலத்தவை எனத் தெரிகிறது.
இவை தவிர, இங்கு பெருங்கற்கால நாகரிகத்தைச் சேர்ந்த 10 தாங்கிகள் கிடைத்துள்ளன. சிகப்பு நிறம் கொண்ட இவை களிமண்ணால் சுடப்பட்டவை. இந்தத் தாங்கிகள் பானைகள் அல்லது பாத்திரங்கள் கீழே விழாமல் இருக்க பயன்பட்டிருக்கக் கூடும். இதைப் போன்ற தாங்கிகளே மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடைகளை நெசவு செய்யும்போது நூலைச் சுற்றி வைப்பதற்கு பயன்படும் தறிக்கொல் ஒன்றும் இதனுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தவிர, 30 வகையான அரிய வண்ணக் கல் மணிகளும், தாயம் விளையாட பயன்பட்ட பலகறைப் பாசிகள் (சோழி) மூன்றும், இரண்டு மண் விளக்குகளும் இவற்றுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவற்றுடன் கிடைக்கப்பெற்ற குறியீடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். ஏனெனில், தமிழ்ப் பிராமியின் வரி வடிவம் தமிழகத்தில் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாகவே மக்களின் தகவல் பரிமாற்றத்துக்காக குறியீடுகள் பயன்பட்டன என்கிறது வரலாறு. சிந்து சமவெளி எழுத்துகளுக்கு பின்பு இந்தியாவில் பரவலாக கிடைக்கும் குறியீடுகள் இவை. அதிகளவில் இவை கிடைப்பதால் இந்த குறியீடுகளின் மூலம் பெரியளவில் பண்பாட்டு பரவல் நடந்திருப்பது தெரிய வருகிறது.
மேலும் இந்த குறியீடுகள் இலங்கை, கரூர், அழகன்குளம், ஆதிச்சநல்லூர், கொடுமணல் ஆகிய இடங்களில் கிடைத்த குறியீடுகளின் உருவத்தை ஒத்துள்ளன. மேலும், இங்கு கிடைக்கப்பெற்ற பானை ஓடுகளில் கொடுமணலில் இருந்ததுபோன்றே தமிழ் பிராமி எழுத்துகள் காணப்படுகின்றன” என்றார்.
இதுகுறித்து தொல்லியல் துறையின் முன்னாள் துணை இயக்குநரான முனைவர் ர.பூங்குன்றனாரிடம் கேட்டபோது,
“தற்போது அந்தப் பகுதியில் கிடைத்து வரும் ஆதாரங்கள் மிக சொற்ப அளவிலானவை மட்டுமே. மத்திய, மாநில அரசு விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொண்டால் ஏராளமான ஆச்சரியங்களும் அறியாத வரலாறும் கிடைக்கக்கூடும். தற்போது கிடைத்துள்ள சுடுமண்ணாலான இலச்சினை முத்திரை சேர மன்னர்களால் அப்பகுதியை நிர்வாகம் செய்த குறுநில மன்னர்களுக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ அளிக்கப்பட்டிருக்கலாம். இதனை வில், அம்பு மற்றும் அங்குசம் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT