Published : 06 Jan 2015 08:22 AM
Last Updated : 06 Jan 2015 08:22 AM

எம்பிபிஎஸ் வினாத்தாள் முறையில் அதிரடி மாற்றம் : தரமான மருத்துவர்களை உருவாக்க மருத்துவ பல்கலை. நடவடிக்கை

தரமான மருத்துவர்களை உருவாக்கும் வகையில் எம்பிபிஎஸ் வினாத்தாள் முறையில் மருத்துவ பல்கலைக்கழகம் அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி மருத்துவ மாணவர்கள் அனைத்து பாடங்களையும் ஆழமாக படிக்கும் வகையில் புதிய கேள்வித்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்கள் குறிப்பிட்ட மதிப்பெண்ணுக்கு "தியரி" தேர்வையும் குறிப்பிட்ட மதிப்பெண்ணுக்கு செய்முறைத்தேர்வு மற்றும் வாய்மொழித்தேர்வை எதிர் கொள்ள வேண்டும். தேர்ச்சி பெற வேண்டுமானால் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும்.

இதுவரை பின்பற்றப்பட்டு வந்த கேள்வித்தாள்முறை, மாணவர்கள் மேலோட்டமாக படித்தாலே தேர்ச்சி பெறும் வகையிலும், குறிப்பிட்ட பகுதிகளை படிக்காமல் விட்டுவிடுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக அமைந்திருந்தது.

மருத்துவப் படிப்பு என்பது மற்ற படிப்புகளைப் போலன்றி மனிதர்களின் உயிரோடு சம்பந்தப்பட்டது என்பதாலும், விடைத்தாள்களை திருத்தும்போது மதிப்பெண் வழங்குவதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்களை தீர்க்கும் வகையிலும் கேள்வித்தாள் முறையை மாற்றியமைக்க தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து மூத்த பேராசிரியர்கள் 15 பேர் தலைமையில் பாடவாரியாக நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு புதிய கேள்வித்தாள் முறை உருவாக்கப்பட்டது.

அதன்படி, முதல் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு கேள்வித்தாள்களில் கேள்விகளின் எண்ணிக்கை 22-லிருந்து 13 ஆக குறைக்கப்பட்டது. அத்துடன் முன்பிருந்த அரை மதிப்பெண் முறையும் நீக்கப்பட்டது. மேலோட்டமாக படித்தாலே விடையளிக்க வகைசெய்யும் ஒரு மார்க் கேள்விகள் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக சிறு விளக்கம் அளிக்கும் 3 மார்க் கேள்விகள் சேர்க்கப்பட்டன.

இந்த புதிய கேள்விமுறை முதல்கட்டமாக முதல் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த கட்டமாக 2-ம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள தேர்வில் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதிலும் முதல் ஆண்டு கேள்வித்தாள் முறை போன்றே மாற்றம் செய்துள்ளனர். கேள்விகளின் எண்ணிக்கை 22-லிருந்து 10 ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையே, மாணவர்களில் ஒருசாரார் புதிய வினாத்தாள் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வினாத்தாள் முறை மாற்றம் தொடர்பாக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் ஜான்சி சார்லஸ், தேர்வு காட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் சி.தர் ஆகியோர் கூறியதாவது:

எதிர்காலத்தில் நோயாளிகளை கவனிக்கக் கூடிய நாளைய மருத்துவர்களாகிய எம்பிபிஎஸ் மாணவர்கள் அனைத்து மருத்துவ பாடங்களிலும் ஆழமாக அறிவை பெற்றிருக்கிறார்களா? என்பதை சோதிக்கும் வகையில் புதிய வினாத்தாள் முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

முந்தைய கேள்வித்தாளில் வினாக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் அவர்களால் குறிப்பிட்ட நேரத்தில் விளக்கமாக பதில் அளிக்க முடியாமல் இருந்தது. அதை கருத்தில்கொண்டே கேள்விகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவம் படிக்கும் மாணவர்கள் மற்ற துறையினருடன் தங்களை ஒப்பிடக்கூடாது. அனைத்து பாடங்களிலும் ஆழமான அறிவு பெற்றால்தான் நாளை சிறந்த மருத்துவர்கள் ஆகி, நோயாளிகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x