Published : 07 Jan 2015 09:48 AM
Last Updated : 07 Jan 2015 09:48 AM
இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் (ஐஆர்சிடிசி) ஆன்மிக சிறப்பு ரயில் வரும் 17-ம் தேதி மதுரையில் இருந்து புறப்பட்டு செல்கிறது.
இது தொடர்பாக ஐஆர்சிடிசி கூடுதல் பொது மேலாளர் எல்.ரவிக்குமார் கூறியதாவது: ஐஆர்சிடிசி சார்பில் இயக்கப்படும் ஆன்மிக சிறப்பு ரயில்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. வரும் 17-ம் தேதி மதுரையில் இருந்து தை அமாவாசை சிறப்பு ரயில் புறப்பட்டு, சென்னை சென்ட்ரல் வழியாக காசி, கயா, அலகாபாத், ஹரித்துவார் சென்றடையும். 26-ம் தேதி ராமேசுவரம் வரும் சிறப்பு ரயில் 27-ம் தேதி மதுரைக்கு சென்று, பின்னர் சென்னை திரும்பும். யாத்திரிகர்கள் தை அமாவாசை அன்று கயாவில் நீண்ட பிரதானம் செய்து கொள்ளலாம். இந்த யாத்திரை சுற்றுலாவுக்கு ரூ.10,010 கட்டணமாகும். இதில் 2 ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட இருக்கை, தங்கும் ஹால் வசதி, தென்னிந்திய சைவ உணவு, ஏ.சி. இல்லாத வாகன வசதி உள்ளடங்கும்.
இதுதவிர, மற்றொரு சிறப்பு பிரிவில் ரூ.21,670 கட்டணம். இதில் 3 அடுக்கு ஏ.சி. படுக்கை, தங்குவதற்கு வசதி, ஏ.சி. வசதி, தென்னிந்திய சைவ உணவு, ஏ.சி. வாகன வசதி உள்ளிட்டவை அடங்கும். டீலக்ஸ் பேக்கேஜுக்கு ரூ.29,150 கட்டணம். இதற்கு 2 அடுக்கு ஏ.சி. படுக்கை, தங்கு வதற்கு ஏ.சி. ஓட்டல் அறைகள், தென்னிந்திய சைவ உணவு மற்றும் ஏ.சி. வாகன வசதி உண்டு. மத்திய, மாநில அரசு ஊழியர்கள் விதிகளுக்கு உட்பட்டு எல்.டி.சி. வசதி பெறலாம். இந்த ஆன்மிக ரயிலில் 700 பேர் பயணம் செய்ய இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உறுதி செய்யப்பட்ட பயண டிக்கெட் இதன் சிறப்பாகும்.
சுற்றுலா பற்றிய மேலும் விவரங்களுக்கு சென்ட்ரல் ரயில் நிலையம் - 9003140681, மதுரை ரயில் நிலையம் - 98409 02915, கோவை அலுவலகம் - 90031 40680, காட்பாடி ரயில் நிலையம் - 98409 48484 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். www.irctctourism.com இணையதளத்திலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT